கட்டுரைகள்

திமுக ஓராண்டு ஆட்சி: பெண்களுக்கான திட்டங்களின் பிளஸ், மைனஸ் ஓர் அலசல்!


ம.பவித்ரா

கட்டுரையாளர்

ஸ்டாலின்தான் வராரு, விடியல் தரப் போராரு, அதுதான் மக்களோட முடிவு என்கிற திமுகவின் பிரசாரப் பாடல் கடந்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலின்போது பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. அந்த பாட்டைப்போலவே மக்கள் பெருவாரியான இடங்களில் திமுகவை வெற்றி பெறவைத்தனர். இன்றோடு திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டாகிவிட்டது.

ஆட்சித் தொடக்கத்திலேயே கொரோனா இரண்டாம் அலையில் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் அழுகுரல்களும், ஆம்புலன்ஸ் சத்தங்களும் கேட்ட கடினமான காலம் அது. எந்தவொரு அரசுக்குமே அந்த சூழ்நிலையைக் கடப்பது மிகவும் சவாலாகத்தான் இருந்திருக்கும்.

திமுகவை பொருத்தவரை தேர்தல் பிரச்சாரத்தின்போது பெண்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளைக் கொடுத்தனர். ஆட்சிக்கு வந்தவுடனேயே பெண்களுக்கு இலவச பயணத்திற்கான கோப்பில் தான் முதலமைச்சராக ஸ்டாலின் முதல் கையெழுத்திட்டார். பால் விலை ரூ. 3 குறைப்பு போன்ற அதிரடியான பெண்களுக்கு கைகொடுக்கும் திட்டங்களாக முதலமைச்சராக ஸ்டாலின் நடைமுறைக்கப்படுத்தியது திமுக மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது. துளி போன்ற இந்த ஓராண்டு ஆட்சியில் கடல் போல சாதனைகளைச் செய்துள்ளோம் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

அந்த வகையில், திமுக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்னென்ன, அதில் பெண்களிடம் வரவேற்பைப் பெற்ற திட்டங்கள் எவை என்பது குறித்து இந்தத் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

பால் விலை குறைப்பு: ஆவின் பாலின் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. கொரோனா காலத்தில் வெளியிடப்பட்ட இத்திட்டம் பெண்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மேலும், லிட்டருக்கு ரூ. 3 குறைத்ததன் எதிரொலியாக, தமிழகத்தில் 1.98 லட்சம் லிட்டர் பால் கூடுதலாக விற்பனையாகி வருகிறது.

பெண்களுக்கு பேருந்து கட்டணம் இலவசம்: தமிழகத்தில் 60 சதவீதப் பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர். உள்ளூர் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்யும் திட்டத்தை திமுக அமல்படுத்தியது. இத்திட்டம் பெண்கள் மத்தியில் மிகுந்த கவனம் பெற்ற திட்டமாகும். இதன் மூலம் வேலைக்குச் செல்லும் பெண்கள் மாதம்தோறும் ரூ. 1,000 முதல் ரூ. 1,500 வரை செலவை மிச்சப்படுத்தப்படுத்த முடிகிறது என்று கருத்து தெரிவிக்கின்றனர். இதுவரை 106.34 கோடி பேர் அரசுப் பேருந்தில் இலவச பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஒருபுறம் மக்களுக்கான இந்த சேவைக்கு பெரும் வரவேற்பு இருந்தாலும், சொகுசுப் பேருந்துகள் மட்டுமே அதிக அளவில் இயக்கப்படுகின்றன. பெண்கள் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளும் சாதாரணப் பேருந்துகள் குறைந்த அளவிலேயே இயக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டும் பரவலாகக் காணப்படுகிறது.

குடும்ப அட்டை: ஒரு குடும்பத்தில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று பேர் வரை இருப்பவர்களுக்குத்தான் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கணவனை இழந்த அல்லது பிற சமூக மற்றும் குடும்ப காரணங்களுக்காக தனியாக உள்ள பெண்களுக்கும் குடும்ப அட்டை வழங்கப்படும் என்ற திட்டம் மிகச் சிறப்பான திட்டமாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பல பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

மகப்பேறு விடுப்பு: அரசுப் பணியாளர்களுக்கான மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. பெண்களுக்கான திட்டங்களில் மிக முக்கியமானதாக பார்க்கப்படும் இத்திட்டம் அரசுப் பணியாளர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும், பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் 6 மாதகால மகப்பேறு விடுப்பு என்பதே கேள்விக்குறியாகத்தான் உள்ளது என்ற பரவலான கருத்தும் காணப்படுகிறது. எனவே, பேறுகால விடுப்பு அனைத்துத் தரப்பு பெண்களுக்குமானது என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பது பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன் தள்ளுபடி: ஏழை மற்றும் நடுத்தர பெண்களின் வாழ்வாதாரம், முன்னேற்றத்தில் முக்கியப் பங்காற்றி வருகிறது மகளிர் சுய உதவிக் குழுக்கள். இதன் மூலம் கடன் பெற்று பல்வேறு சிறு தொழில்களைப் பெண்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில், மகளிர் சுயஉதவிக் குழுவினர் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற ரூ. 2,576 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் மூலம் சிறு, குறு தொழில் செய்யும் பெண்கள் தங்கள் தொழிலை மேலும் விரிவுபடுத்துவதற்கு மிகவும் உதவியாக உள்ளதாகக் கூறி வருகின்றனர்.

அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு: அரசுப் பணிகளில் மகளிருக்கான இடஒதுக்கீட்டை 40 சதவீதமாக உயர்த்தியது பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இது பெண்களின் முன்னேற்றத்துக்குப் பங்காற்றும் முக்கியத் திட்டமாகப் பார்க்கப்படுகிறது.

உயர்கல்வி உறுதித் திட்டம்: அதிமுக அரசு பெண்களுக்கு வழங்கி வந்த திருமண உதவித் திட்டத்தை உயர்கல்வி உறுதித் திட்டமாக திமுக அரசு அறிவித்துள்ளது. மாணவிகள் தங்களது உயர்கல்வியைத் தொடரும் வகையில், 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ. 1,000 நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி, டிப்ளமோ படிக்கும் மாணவிகளுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.

பெண்களுக்கான உயர்கல்வியை உறுதி செய்வதன் மூலம் தங்களுக்குத் தேவையான நகைகளையும், திருமண செலவையும் பெண்களே பார்த்துக் கொள்வார்கள். பெண்களுக்குத் தரும் நிதியுதவியை விட நிதி சார்ந்த சுதந்திரத்தை வழங்குதே முக்கியம். உயர்கல்வியே தேவை என்றும், இத்திட்டம் மிகவும் சிறப்பான திட்டம் என்றும் பெண்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆனால், கிராமப்புறங்களில் தாலிக்குத் தங்கம் திட்டம் ரத்து செய்யப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகவே கூறப்படுகிறது. ஒரு முறை வழங்கும் தங்கத்தை விட ஆண்டுதோறும் பெண் பிள்ளைகளுக்கு கொடுக்கப் போகிற பணம் மற்றும் கல்வியால் பெண்களுக்கு ஏற்படும் முன்னேற்றம் என்ற பார்வையில் இன்னும் பார்க்காததன் விளைவாக இந்தஅதிருப்தி ஏற்பட்டதாக முன்வைக்கப்படுகிறது.

கொரோனா நிவாரண நிதி: ஆட்சி தொடங்கியதில் இருந்தே திமுகவினருக்குப் பெரும் சவாலை ஏற்படுத்தியிருந்தது கொரோனா பெருந்தொற்று. வேலை இழப்பு, பொருளாதார சிக்கல் என பல்வேறு பிரச்னைகளில் சிக்கிக் கொண்டிருந்தனர் பொதுமக்கள். அந்த வகையில், கொரோனா நிவாரணத் தொகையாக அனைவருக்கும் திமுக அரசு ரூ. 4,000 வழங்கியது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.கூடவே மளிகை பொருட்களையும் வழங்கியது பெண்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை தந்தது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு: தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாளைக் கொண்டாடும் வகையில், 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை அனைத்து நியாய விலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், கடந்த ஆட்சியின்போது வழங்கப்பட்டிருந்த பொங்கல் பரிசுத் தொகைக்கு பொதுமக்கள் பழக்கப்பட்டிருந்தனர். கொரோனா தொற்று பரவலால் வாழ்வாதாரத்தை இழந்திருந்த நிலையில், அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பரிசுத் தொகையை எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அதற்கு மாறாக வழங்கப்பட்டிருந்த பரிசுத் தொகுப்பும் தரமாக இல்லாதது பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. உருகிய வெல்லம், மோசமான அரிசி என பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் கடும் விமர்சனத்துக்குள்ளாகியவுடன் முதலமைச்சரே நேரில் நியாய விலை கடைகளில் ஆய்வு செய்து சரிசெய்தார்.

பெண்களுக்கு உரிமைத் தொகை: தேர்தலின்போது பெண்களுக்கு உரிமைத் தொகையாக ரூ. 1,000 மாதம்தோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இது பெண்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பையும், வரவேற்பையும் பெற்றது. திமுக வெற்றி பெற்றதற்கு இத்திட்டம் கூட ஒரு காரணம்தான். ஆனால், இதுவரை அந்தத் திட்டம் குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. இந்த அறிவிப்பு வெளியாகும் நாளே தற்போதைய அரசு முழுமையாக பெண்கள் நலனை பேணும் அரசு என்று சொல்ல முடியும் .

உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவீத இட ஒதுக்கீடு: 2022 பிப்ரவரியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு தரப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் 6,500 பெண்கள் மாமன்றங்கள், நகர்மன்றங்கள், பேரூராட்சி மன்றங்களில் உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர். மொத்தம் உள்ள 21 மாநகராட்சியில் சென்னை, கோவை, மதுரை, ஈரோடு உள்ளிட்ட 11 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளில் பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த 50 சதவீத ஒதுக்கீடு வரவேற்புக்குரிய திட்டமாகப் பார்க்கப்படுகிறது.
அதோடு சென்னை மாகராட்சி மேயராக பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பெண்ணை திமுக அறிவித்ததும் பெண்களுக்கான அரசியல் அதிகாரத்தை உள்ளாட்சியில் வழங்கியதற்கான சான்று . பெண்கள் மட்டுமல்லாமல் திருநங்கைகளும், மாமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதும் ,இளம் பெண்கள் அதிகளவில் மாமன்ற உறுப்பினர்களாக தேர்வானதும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் தான் என்று பெண்களுக்கு அரசியல் அதிகார பங்கீடு வரலாற்றில் முன் நிற்கிறார். இப்போது இருக்க கூடிய சவால்களே தேர்ந்தெடுக்கப்ட்ட பெண்கள் சுதந்திரமாக பணியாற்றும் சூழலை இந்த அரசு செய்து தரவேண்டியது அவசியம்.

திமுகவின் ஓராண்டு ஆட்சிக் காலம் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் நம்மிடம் கூறுகையில், ஆரம்பகட்டத்தில் இருந்தே பெண்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபடும் இயக்கம் திமுக. திமுக அரசு கொண்டு வந்துள்ள இலவசப் பேருந்து திட்டத்தின் மூலம், கூலி வேலை செய்யும் பெண்கள், துப்புரவுப் பணியாளர்கள், அலுவலகத்துக்கு செல்லும் பெண்கள் என அனைவருக்கும் ரூ. 800 முதல் ரூ. 1,000 வரை செலவு மிச்சமாகிறது. 5000 ரூபாய் சம்பளம் வாங்கும் பெண்களுக்கு 1,000 ரூபாய் சேமிப்பாகிறது என்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

கலைஞர் காலத்தில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டது மகளிர் சுய உதவிக் குழுக்கள். தற்போது சுயஉதவிக் குழுக்களின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மேலும், கோடிக்கான ரூபாய் மதிப்பிலான புதிய கடன்களும் வழங்கப்பட்டு, பெண்கள் தொழில் செய்யவும், வருமானம் ஈட்டவும் வழிவகை செய்துள்ளார் .

பெண்களுக்கான உரிமைத் தொகை ரூ. 1,000 வழங்குவதற்கான சர்வே எடுக்கப்பட்டு வருகிறது. ஏழைப் பெண்களுக்கு இப்பணம் சென்று சேர வேண்டும் என்பதில் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது இந்த அரசு. மத்திய அரசு எதைப் பற்றியும் கவலைப்படாமல் அத்தியவாசியப் பொருள்களின் விலையை அதிகரித்து வருகிறது. ஆனால், மக்களினுடைய சுமையைக் குறைப்பதற்காக பால் விலை குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை ஸ்டாலின் அரசு அளித்து வருகிறது.

பெண்களுக்கான தாலிக்குத் தங்கம் திட்டத்தில் கடந்த ஆட்சியில் நிறைய முறைகேடு நடைபெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்துக்கு பதிலாக படிக்கும் குழந்தைகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாணவிகள் படிக்க மிகவும் உதவியாக இருக்கும். பள்ளி மாணவிகளுக்கு, குடும்பத் தலைவிகளுக்கு, முதியோர்களுக்கு என்று சமுதாயத்தில் இருக்கும் சரிபாதி பெண்களுடைய நிலை முன்னேற இத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்றார்.

இதுகுறித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறுகையில், ”திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளும், கூட்டுப் பாலியல் வன்முறைகளுமே அதிகரித்துள்ளன. . கருவறை முதல் கல்லறை வரை பெண்களுக்கான திட்டங்கள் சென்று சேர்ந்தன. பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு 13 கடும் தண்டனைகளை அமல்படுத்தினார் ஜெயலலிதா. ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு மிக முக்கியப் பங்காற்றுவது பெண்கள்தான். ஆனால், இன்றைய ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டி, லேப்டாப், திருமண உதவித்தொகை, தாலிக்குத் தங்கம், சமுதாய வளைகாப்பு, மகப்பேறுக்குப் பின் ஊட்டச்சத்துப் பெட்டகம், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனம் என ஏழைப் பெண்களுக்கான அனைத்துத் திட்டங்களையும் ஜெயலலிதா கொண்டு வந்தார். ஆனால், அந்த திட்டங்கள் அனைத்தையும் அழித்து வருகிறார் ஸ்டாலின். தாலிக்குத் தங்கத்தால் பல்வேறு பெண்கள் பயனடைந்துள்ளனர். ஆனால், அந்தத் திட்டத்தை இந்த அரசு ரத்து செய்துவிட்டது.

சட்டசபையில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ.கூட அத்திட்டத்தைக் கைவிடக்கூடாது என வாதிட்டார். அம்மா உணவகம் மூலம் ஏழைகள் அனைவரும் பயன்பெற்று வருகின்றனர். அம்மா உணவகத்தில் வேலை செய்பவர்கள் பெரும்பாலானோர் பெண்கள்தான். ஆனால், அந்தத் திட்டத்தைக்கூட கைவிட முயன்றது திமுக அரசு. அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களுக்குப் புதுப்பெயர் சூட்டியுள்ளதே தவிர, பெண்களுக்கான எந்தவொரு புதிய திட்டத்தையும் திமுக அரசு கொண்டு வரவில்லை. மாறாக கொண்டு வரப்பட்ட திட்டங்களை அழிக்க மட்டுமே செய்துள்ளது ”என்றார்.

சமூக நீதி கொள்கையை முன் வைக்கும் திராவிட மாடல் ஆட்சி என குறிப்பிடும் முதலமைச்சர் ஸ்டாலின் பெண்கள் மேம்பாடு ,பெண்களுக்கான நீதி வழங்குவதில் உறுதிபாட்டோடு இருக்க வேண்டும் என்பதும் கணவனால் கைவிடப்பட்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு தவிக்கும் பெண்களின் மேம்பாட்டிற்கான ஒரு திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும் என்பதே முதலமைச்சரிடம் முக்கியமான வேண்டுகோளாக தனித்துவிடப்பட்ட பெண்கள் முன்வைக்கின்றனர்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஓராண்டில் அரசு செயல்பாடுகளுக்காக, ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட குழுக்களில் பெண்களுக்கும் இடம் அளித்திருக்கிறது . அந்த வகையில் இந்த அரசின் செயல்பாடுகளில் பெண்களின் பங்கும் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

Advertisement:
SHARE

Related posts

மணிகண்டனின் சுவாரஸ்யமான 7 பதில்கள்..!

Niruban Chakkaaravarthi

சாக்லேட் கடவுளின் பரிசு

Saravana Kumar

சீனாவின் சிம்மசொப்பனம்

Vandhana