திமுக எம்.பி. ஆ.ராசாவின் கருத்துக்களை முழுமையாக ஆதரிக்கிறோம்-சீமான்

மனுதர்மத்தைச் சாடியதற்காக, ஆ.ராசா எம்.பி.யைக் குறிவைத்து, மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர்…

மனுதர்மத்தைச் சாடியதற்காக, ஆ.ராசா எம்.பி.யைக் குறிவைத்து, மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மனு தர்மத்தின் கொடுங்கோன்மையை எடுத்துரைத்து, சூத்திரர் (வேசி மக்கள்) எனும் இழிவை தமிழர்கள் சுமக்கக்கூடாதெனக் கூறியதால், திமுகவின் துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசாவைக் குறிவைத்து மதவாதிகள் தனிநபர் தாக்குதல் தொடுப்பதும், அவதூறு பரப்புரை செய்வதுமானப் போக்குகளை இனியும் சகித்துக் கொண்டு இருக்க முடியாது. பிறப்பின் வழியே பேதம் கற்பிக்கும் வருணாசிரமக் கோட்பாட்டால் விளைந்த சமூக அநீதியை அறச் சீற்றத்தோடு முன்வைத்த ஆ.ராசாவின் கருத்து மிக நியாயமானது. அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அக்கருத்துக்குப் பக்க பலமாகத் துணை நிற்கிறது.

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்தத் தொன்மப் பெருமைகள் பல வாய்ந்த தமிழர் எனும் தேசிய இனத்தின் மக்கள் நாங்கள். தமிழர்களின் வாழ்வியல் இலக்கணமே அறநெறிதான். அது சமத்துவத்தையும், சமதர்மத்தையுமே அடிப்படையாகக் கொண்டது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்’ என உயிர்ம சமத்துவம் போதிக்கிறார் தமிழ் மறையோன் வள்ளுவப்பெருமகனார்.

‘சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்!’ எனப் பாடுகிறார் சைவசமயக்குரவர் திருநாவுக்கரசர். ‘பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா? இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ?’ என வினவுகிறார் சித்தர் சிவவாக்கியர். ‘சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரசண் டையிலேஆதியிலே அபிமானத்து அலைகின்ற உலகீர்!’ என்று பாடுகிறார் ஐயா திருவருட்பிரகாச வள்ளலார். ‘தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்’ என்று அறம்போற்றுகிறார் ஐயா வைகுந்தர். ‘நான் யாருக்கும் அடிமையில்லை; எனக்கும் யாரும் அடிமையில்லை’ என்கிறார் அண்ணல் அம்பேத்கர். ‘தன்னை உயர்ந்த சாதியென எண்ணிக்கொண்டு, தனக்கு மேலே உயர்ந்தவர்கள் யாருமில்லையெனக் கருதுபவர்கள், தனக்குக் கீழேயும் தாழ்ந்தவர்கள் யாருமில்லை என எண்ணிவிட்டால், ஒரு சிக்கலுமிராது’ என்கிறார் ஐயா பெரியார். ‘

ஆரிய மார்க்கமான இந்து மதத்தை தமிழர்கள் ஏற்றதாலேயே, தாங்கள் தனித்தப்பேரினம் என்பதை மறந்துபோனார்கள். இந்து மதத்தில் தாங்களும் ஒரு பகுதியினரென்று கருதிக் கொண்டதாலேயே தன்மானத்தையும், தன்னாட்சியுரிமையையும் தமிழர்கள் இழந்துவிட்டார்கள்’ என்கிறார் பேரறிஞர் அண்ணா. ‘சாதிகள் இல்லையடி பாப்பா! – குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்! நீதி உயர்ந்த மதிகல்வி அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்!’ எனப் பொதுமைப் பாடுகிறார் பெரும்பாவலன் பாரதி.

‘யாரு மேல கீறினாலும் ரத்தம் ஒண்ணுதான்! ஆக மொத்தம் நீயும், நானும் பத்து மாதம்தான்’ எனப் பேதங்களைச் சாடுகிறார் மக்கள் பாவலர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். ‘சாதிவெறி சமயவெறி கன்னல் நிகர் தமிழுக்கு நோயே! இடைவந்த சாதி என்னும் இடர் ஒழிந்தால் ஆள்வது நம் தாய் தாய் தாயே! எனப்பாடுகிறார் புரட்சிப்பாவலர் பாரதிதாசன். மூத்தோர்களும், முன்னோர்களும் உதிர்த்த இத்தகையக் கூற்றுகளின் மூலம் சாதியக்கட்டமைப்பும், வருணாசிரமக்கோட்பாடுகளும் தமிழர்களின் அறநெறிக்கு மட்டுமல்லாது, இறைநெறிக்கும் எதிரானது என்பதை உணர்ந்துகொள்ள முன்வர வேண்டும்.

முற்காலத்திலேயே நாகரீகமடைந்து, நிலங்களைத் திணைகளாகப் பகுத்து, வாழ்வியலை அகவாழ்க்கை, புறவாழ்க்கையெனப் பிரித்து, அவற்றிற்கு தனியொரு இலக்கணம் வகுத்து, அதற்கு அடிப்படையாக அறநெறியை வைத்து, வாழ்வாங்கு வாழ்ந்து வந்த தமிழ்ச் சமூகத்தின் மீது நிகழ்ந்தேறிய ஆரியப்படையெடுப்பினால் மற்ற மொழிவழித் தேசிய இனங்களைப் போலவே, தமிழ்த் தேசிய இனமும் பிரித்தாளும் சூழ்ச்சியை எதிர்கொள்ள நேரிட்டது.

ஆதியில் தாய்வழிச் சமூகமாகக் கட்டமைக்கப்பட்டு, சங்கக் காலத்திலேயே பெண்பாற் புலவர்களைக் கொண்டிருக்கிற அளவுக்கு பெண் கல்வியில் சிறந்து விளங்கி, முற்போக்கோடு திகழ்ந்த தமிழினத்தில் பெண்களுக்குரிய தலைமையும், முதன்மைத்துவமும் ஆரியச் சூழ்ச்சியினால் இடைக்காலத்தில் பறிக்கப்பட்டது.

‘வெள்ளைக்காரன் நமக்கெல்லாம் இந்து எனும் பொதுப்பெயரை வைத்தானோ இல்லையோ, நாம் தப்பித்தோம்’ என மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் ‘தெய்வத்தின் குரல்’ நூலில், இதனைத்தான் பதிவுசெய்தார். வெள்ளையர் இயற்றியச் சட்டத்தின் உதவியோடு, தமிழர்களுக்குச் சூத்திர (வேசி மக்கள்) பட்டத்தைச் சூட்டி, மனு தர்மத்தை நிலைநிறுத்த எந்த இந்து மதத்தைப் பயன்படுத்திக்கொண்டார்களோ, அந்த மதத்தைத் தோலுரித்து தமிழர்கள் மீதான இழிவைப் போக்கவே ஆ.ராசா  தனது இனமானக்கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

தமிழர்கள் மீது சுமத்தப்பட்ட சூத்திரரெனும் (வேசி மக்கள்) பழிச்சொல்லை நீக்கவே, இந்துக்களாக இருந்தால் இழிமகன்களாகிப் போவோமெனக் கூறி, அவற்றிலிருந்து விடுபடச்சொல்கிறாரே ஒழிய, தனிப்பட்ட எவரையும் அவர் இழித்துரைக்கவில்லை.

ஆ.ராசாவின் கருத்துக்களை முழுமையாக ஆதரித்து, என்றைக்கும் துணைநிற்போம் என்பதையும் நாம் தமிழர் கட்சி சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன் என்று சீமான் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.