முக்கியச் செய்திகள் உலகம் ஆசிரியர் தேர்வு கட்டுரைகள் செய்திகள்

62 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஃபிடல் காஸ்ட்ரோ-மால்கம் எக்ஸ் சந்திப்பு


குதுப்தீன் 

கட்டுரையாளர்

ஐநா சபையின் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா வந்த ஃபிடல் காஸ்ட்ரோ, கியூபாவில் மட்டுமல்ல, பாகுபாடு எங்கு நிலவினாலும் அதற்கெதிராக  போராடுவேன் என மால்கம் எக்ஸிடம் தெரிவித்தார். 

 உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவுக்கு வருகை தருகிறார். தலைநகர் மாஸ்கோவில் அவர் தங்குவதற்கு ரஷ்யர் ஒருவர் உதவுகிறார் என்றால் எப்படி இருக்கும்?அப்படி உதவும் நபருக்கு என்ன ஆகுமோ என்ற அச்சம் எழுகிறதா? ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல், இப்படித்தான் ஒரு கம்யூனிஸ்ட்  தலைவரை அமெரிக்காவில் தங்க வைத்தார் மால்கம் எக்ஸ் (Malcom X) .

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கியூபாவில் புரட்சி மலர்ந்திருந்த நேரம். ஃபிடல் காஸ்ட்ரோ அதிபராக பொறுப்பேற்ற பின் ஐநா அவை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, 1960ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அமெரிக்கா வந்திருந்தார். நியூயார்க் மாகாணத்தின் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ஷெல்பர்ன் ஹோட்டலில் ஃபிடல் மற்றும் அவரது குழுவினர் தங்கியிருந்தனர். ஃபிடல் (Fidel Castro) மீது அமெரிக்க அரசாங்கம் கடுமையான கோபத்தில் இருந்தது.

கியூப புரட்சியை, தொடக்கத்தில் அமெரிக்கா வாழ்த்தியது. ஆனால் அதிபராக ஃபிடல் காஸ்ட்ரோ பொறுப்பேற்றுக் கொண்ட பின், ஏராளாமான தனியார் நிறுவனங்களை தேசியமயமாக்கினார். அவற்றில் பெரும்பாலனவை அமெரிக்கர்களுக்குச் சொந்தமானது. அவரின் அதிரடி பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் கடும் அதிருப்தி அடைந்த அமெரிக்கா, ‘உலகின் எதிரியாக’ கியூபாவை வருணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

ஃபிடலின் வருகையை அமெரிக்கப் பத்திரிகைகள் எவ்வளவு மோசமாக சித்தரிக்க முடியுமோ அவ்வளவு மோசமாக சித்தரித்தன. ஃபிடலும் அவரது குழுவினரும் ஹோட்டல் உணவை சாப்பிடாமல், தங்கியிருந்த அறையிலேயே கோழியை அறுத்து சமைத்து சாப்பிடுவதாகவும், சிகரெட்டை அணைத்து தரைவிரிப்புகளை சேதப்படுத்துவதாகவும் சில நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன. அதாவது காடுகளில் வசிப்போர் போல ஃபிடலும் அவரது குழுவினரும் நடந்து கொள்வதாக அமெரிக்க ஊடகங்கள் அலறின. 20 ஆயிரம் அமெரிக்க டாலரை முன்பணமாக செலுத்த வேண்டும் என ஃபிடல் தங்கியிருந்த ஹோட்டல் நிர்வாகம் அவசரப்படுத்தியது.

அமெரிக்காவை விட்டு வெளியேற்ற அரசு மறைமுகமாக அழுத்தம் தருவதை உணர்ந்த ஃபிடல், சென்ட்ரல் பூங்காவிலோ அல்லது ஐநா சபை அலுவலக கட்டிட வளாக புல்தரையிலோ குடில் அமைத்து தங்கப் போவதாக எச்சரித்தார். ஃபிடலின் வருகைக்காக அமெரிக்காவில் உள்ள முற்போக்கு சிந்தனையாளர்கள் உருவாக்கிய, கியூபா நல்லெண்ண கமிட்டிக் கூட்டத்தில் இது தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தப்பட்டது.

ஃபிடல் காஸ்ட்ரோ குழுவினரை ஹார்லெம் நகரில் உள்ள தெரசா ஹோட்டலில் தங்க வைக்கலாம் என்று மால்கம் X ஆலோசனை கூறினார். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அவரை ஆச்சரியமாக பார்த்தனர். இதுவரை வெளிநாட்டு விருந்தினர்கள் அதுவும் அரசு விருந்தினர்கள் யாரும் வந்து தங்காத, கறுப்பர்கள் வசிக்கும் சேரிக்கு அருகில் உள்ள, குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் அமைந்துள்ள தெரசா ஹோட்டலில் தங்கியதில்லை.
அதுமட்டுமல்ல, அமெரிக்காவில் கறுப்பர்களுக்கு பெரும்பாலான ஹோட்டல்களில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. அவர்களை அனுமதிக்கும் ஒன்றிரண்டு ஹோட்டல்களில் தெரசா ஹோட்டலும் ஒன்று என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

கறுப்பர்கள் அனுமதிக்கப்படும் ஹோட்டல் என்றால், மற்ற ஹோட்டல்களுக்கு மத்தியில் அதன் மாண்பை ஒப்பிட முடியுமா? தற்போது ஃபிடல் காஸ்ட்ரோ தங்கியுள்ள பகுதி மிகவும் பரபரப்பான வணிக வளாகங்கள், கட்டிடங்கள் நிறைந்த பகுதியாகும்.
“அமெரிக்காவில் ஏற்கனவே கறுப்பர்கள் துன்பங்களை துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இதில் உலகின் எதிரியாக காட்டப்படும் ஃபிடல் காஸ்ட்ரோவை கறுப்பர்கள் பகுதியில் தங்க வைத்தால் நிலைமை என்னாவது…?” என மால்கம் X-ன் முடிவுக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. ஃபிடலுக்கு எதிராக ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்த வாய்ப்புள்ளதால், ஹார்லெம் நகரில் அவரது குழுவினர் தங்கினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதா என்ற அச்சமும் எழுப்பப்பட்டது.


“ஹார்லெம் நகரின் பாதுகாப்புக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்…” கியூபா நல்லெண்ண கமிட்டிக்கு மால்கம் X உத்தரவாதம் அளித்தார். உடனடியாக ஃபிடல் காஸ்ட்ரோவும், அவரது குழுவினரும் ஹார்லெம் நகரின் தெரசா ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தனர்.

அமெரிக்க இனவெறிக்கு எதிராக கறுப்பர்களின் சமஉரிமைக்காக போராடியவர் மால்கம் X. வெள்ளையர்களோடு ஒன்றிணைந்து வாழலாம் என்றும், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டும் என்ற அகிம்சைக் கொள்கையையும் கொண்டு இனவெறிக்கு எதிராக போராடி வந்தார் மார்ட்டின் லூதர் கிங். ஆனால், அதே காலகட்டத்தில், இனவெறி பிடித்து அலையும், கறுப்பர்களை மனிதர்களாகக் கூட மதிக்காத வெள்ளையர்களோடு எப்படி ஒன்றிணைந்து வாழ முடியும்? அடிக்கு அடி, உதைக்கு உதை என கறுப்பர்களின் உரிமைகளுக்காக புரட்சிகரமாக போரட்டக் களம் கண்டவர் மால்கம் X.

ஃபிடலைச் சந்திக்க மால்கம் X வருகிறார் என்ற செய்தி பரவினால் கூட்டம் கட்டுக்கடங்காமல் ஹோட்டல் முன்பு குவிந்து விடும் எனப் பயந்த மால்கம் X, நள்ளிரவில் அவரைச் சந்திக்க முடிவெடுத்தார். அந்த முடிவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில் நள்ளிரவிலும் ஏராளமான கறுப்பர்கள் தெரசா ஹோட்டல் முன்பு குவிந்திருந்தனர். செப்டம்பர் 19-ம் தேதி நள்ளிரவு, ஃபிடல் காஸ்ட்ரோவை மால்கம் X சந்தித்து உரையாற்றினார்.

இரண்டு கறுப்பின பத்திரிகையாளர்கள், ஒரு புகைப்பட கலைஞர் தவிர வேறு யாரும் அந்த அறையில் அனுமதிக்கப்படவில்லை. தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்ட அதிருப்தி, அதிர்ச்சி எதுவும் இல்லாமல், ராணுவ உடையில் கம்பீரமாக காட்சி அளித்த ஃபிடல் காஸ்ட்ரோ, முகமலர்ச்சியோடு எழுந்து நின்று வரவேற்று கைகுலுக்கினார். அமெரிக்க கறுப்பர்களின் அவல நிலையை ஃபிடலிடம் எடுத்துரைத்தார் மால்கம் X. ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்ப்பாளர், மொழியாக்கம் செய்ய ஃபிடல் கவனமாகக் கேட்டார்.

“14 ஆஃப்ரிக்க நாடுகளின் தலைவர்கள் ஐநா சபை பொது அவையில் பங்கெடுக்கிறோம். லத்தீன் அமெரிக்க சகோதரர்கள் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். கியூபாவில் மட்டுமல்ல, பாகுபாடு எங்கு நிலவினாலும் அதற்கெதிராக காஸ்ட்ரோ போராடுவான். உரிமை இல்லாத இடத்தில், அந்த உரிமையைக் கேட்டு நீங்கள் போராடுகிறீர்கள். நாங்கள் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். உலகத்திலேயே சுதந்திரமான மக்களைக் கொண்ட நாடுகளில் பட்டியலில் கியூபாவும் இணைந்துள்ளது. மற்ற நாடுகளில் உள்ள ஒடுக்கப்படுவர்களைக் காட்டிலும், அமெரிக்காவில் உள்ள கறுப்பர்கள், அரசியல் முதிர்ச்சி உள்ளவர்களாக இருக்கிறார்கள்.” என அமெரிக்கா குறித்த தனது பார்வையை ஃபிடல் காஸ்ட்ரோ வெளிப்படுத்தினார்.

தங்கள் நாட்டில் இனவெறி இல்லை என்பதாக உலகை அமெரிக்கா ஏமாற்றி வருவதாக மால்கம் X கூறியதற்கு, ஆபிரஹாம் லிங்கனின் புகழ்பெற்ற முத்திரை வாக்கியமான, ‘மக்கள் அனைவரையும் சில நேரம் முட்டாளாக்கலாம். சிலரை எப்போதும் முட்டாளாக்கலாம். ஆனால் எல்லோரையும் எப்போதும் முட்டாளாக்க முடியாது’ என்ற வாக்கியத்தை ஃபிடல் காஸ்ட்ரோ நினைவுபடுத்தினார்.

அமெரிக்க வணிக உலகில் யாரும் கவனிப்பாரற்று கிடந்த தெரசா ஹோட்டல், மால்கம் X-ன் அதிரடியான முடிவால், உலகின் கவனத்தைப் பெற்றது. கியூப அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவைச் சந்திக்க ரஷ்ய அதிபர் நிகிதா குருஷேவ், எகிப்து அதிபர் அப்துல் நாஸர், இந்திய பிரதமர் ஜவஹர்லால் உள்ளிட்ட தலைவர்கள் தெரசா ஹோட்டலுக்கு வந்தனர்.
அவமானப்பட்டு அமெரிக்காவை விட்டு ஓடிவிடுவார் காஸ்ட்ரோ என்று வெள்ளை மாளிகை எதிர்பார்த்திருந்த வேளையில், இரண்டாம் உலகத் தலைவர்களை ஒன்றிணைக்கும் புயலாக கறுப்பினச் சேரியில் ஃபிடல் காஸ்ட்ரோ மையம் கொள்வதற்கு மால்கம் X கருவியாக இருந்தார். 

இதனைப் பொறுத்துக் கொள்ளாத அதிபர் ஐசனோவர், ஃபிடல் காஸ்ட்ரோவை அழைக்காமல், ஐநா நிகழ்ச்சிக்கு வந்திருந்த உலக தலைவர்களுக்கு விருந்து கொடுத்து, அவரைக் கேவலப்படுத்தினார். அதேநேரத்தில், தெரசா ஹோட்டல் கறுப்பின ஊழியர்களோடு ஃபிடல் காஸ்ட்ரோ விருந்துண்டு, ஐசனோவர் கூட்டத்துக்கு பதிலடி கொடுத்து உலகின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்தார்.

 

 

– குதுப்தீன் 
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டெல்லியில் திறக்கப்பட்டுள்ள அண்ணா – கலைஞர் அறிவாலயத்தின் சிறப்பம்சங்கள் என்ன?

Arivazhagan Chinnasamy

ஷின்சோ அபேவை கொலை செய்தது ஏன்? – கொலையாளி வாக்குமூலம்

Mohan Dass

சூரி ஹீரோவாக அறிமுகமாகியுள்ள விடுதலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

G SaravanaKumar