பல துணிகர கொள்ளைச் சம்பவங்களை நாடு முழுவதும் அரங்கேற்றும் மேவாட் கொள்ளையர்கள். யார் இந்த மேவாட் கொள்ளையர்கள்.? பகீர் தகவல்களுடன் விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு
வீடு புகுந்து, வீட்டில் இருப்பவர்களை கொடூரமாகக் கொலை செய்து, கொள்ளையடிக்கும் பவாரியா கொள்ளை கும்பல் தமிழகத்தை அலறவிட்டதை இன்றும் யாராலும் மறக்க முடியாது. அப்படிப்பட்ட பவாரியா கொள்ளையர்களுக்குச் சற்றும் சளைக்காதவர்கள் தான் இந்த மேவாட் கொள்ளையர்கள்.
ஹரியானா மாநிலத்தில் உள்ள மேவாட் மாவட்டத்தை மையமாக கொண்டு செயல்படுவதால் இவர்கள், ”மேவாட் கொள்ளையர்கள்” என பல மாநில போலீசாரால் அழைக்கப்படுகின்றனர்.
கொலை, ஏடிஎம் கொள்ளை, வீடு புகுந்து கொள்ளை, ஆன்லைன் மோசடி போன்ற பல குற்றங்களில் ஈடுபட தனித்தனி நெட்வொர்க் வைத்து மேவாட் கொள்ளையர்கள் செயல்படுவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தங்கள் நெட்வொர்க்கில் சிறுவர்களையும் இணைத்து செயல்படும் இந்த கும்பல், திருடுவது எப்படி..? என்பதை அவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்காக பள்ளிக் கூடம் போன்ற ஒரு இடத்தையே உருவாக்கி செயல்முறை விளக்கம் அளிப்பதாக கூறப்படுகிறது.
மேவாட் கொள்ளையர்கள் இருக்கும் பகுதிக்குள் போலீசார் கூட எளிதாக நுழைய முடியாது எனவும், மேவாட் கொள்ளை கும்பலைச் சேர்ந்த யாரெனும் போலீசாரிடம் சிக்கிக்கொண்டாலும், அவர்களுக்காக நீதிமன்றத்தில் வாதாட தனி வழக்கறிஞர் குழுவும், தேவைப்பட்டால் அவர்கள் செய்த குற்றங்களை ஏற்று சரணடைய ஒரு கூட்டமும் உள்ளதாக அதிர்ச்சித் தகவல்களை அடுக்கிக்கொண்டே செல்கின்றனர் காவல் துறையினர்.
சிக்காமல் எப்படி கொள்ளை சம்பவங்களை நிகழ்த்துவது எனத் தேடிப் படித்து தெரிந்துகொள்ளும் மேவாட் கும்பல் அதற்கும் சேர்த்து பயிற்சி அளிப்பதாக சொல்லப்படுகிறது. ருமேனியாவில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற கொள்ளையின் சாராம்சத்தை கற்று அதே முறையை பயன்படுத்தி 2021 ஆம் ஆண்டு சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் எஸ்.பி.ஐ ஏடிஎம்-களை குறிவைத்து மேவாட் கும்பல் கொள்ளையடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது சென்னையில் கூடுதல் ஆணையராக இருந்த கண்ணன், எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய மேவாட் கொள்ளையர்களை கைது செய்தார்.
அதேபோல ஏடிஎம்-களின் அலாரம் சிஸ்டத்தை செயலிழக்கச் செய்து, வெல்டிங் மிஷ்னால் ஏடிஎம்-களை துளைபோட்டு கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவர்களான மேவாட் கொள்ளையர்கள் 2022 ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் ஏடிஎம் கொள்ளைச் சம்பவத்தை நடத்தினர். கொள்ளையில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியிலும், அதன் தொடர்ச்சியாக கோலாரிலும் ஏடிஎம் கொள்ளையை மேவாட் கும்பல் அரங்கேற்றினர். இந்த வழக்கில் டெல்லி போலீசாரால் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனையும் படியுங்கள்: ’பிபிசி சில கணக்குகளில் முறையாக வரி செலுத்தவில்லை’ – வருமான வரித்துறை விளக்கம்
அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி மாதம் திருவண்ணாமலை மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடத்தப்பட்ட 4 ஏடிஎம் கொள்ளைச் சம்பவங்களுக்கும் மேவாட் கும்பலே காரணம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட மேவாட் கும்பல் தலைவனான முகமது ஆரிஃப் என்பவனை தமிழக போலீசார் கைது செய்தனர். அவனிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தொடர்பாகவும், கூட்டாளிகள் தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதும் வடக்கு மண்டல ஐஜி-யாக உள்ள கண்ணன் தலைமையிலான போலீசாரே கொள்ளையனை கைது செய்துள்ளனர்.

இதுபோன்ற கொள்ளை கும்பல் அவ்வப்போது தமிழகத்தினுள் வந்து கொள்ளையை அரங்கேற்றி போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தினாலும், தமிழக போலீசார் தங்களின் அதிரடி நடவடிக்கைகளால் கொள்ளையர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தொழிநுட்பங்கள் வளர்ந்துவிட்ட இக்காலகட்டத்தில், கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள் மாநிலத்திற்குள் நுழைவதற்கு முன்னரே அவர்களை கண்டறிந்து, கைது செய்ய தமிழக போலீசார் புதிய யுக்திகளை கையாள வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தி குறித்த தொகுப்பினை வீடியோவை காண ..








