காஸாவை ஒட்டிய பகுதிகள் தான் பதற்றத்துடன் உள்ளன என இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்பிய டாக்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் குழு இடையிலான போரால் இஸ்ரேலில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்பதற்கு ‘ஆபரேஷன் அஜய்’ எனும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதன்படி இஸ்ரேலில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் இஸ்ரேலில் இருந்து இயக்கப்பட்ட முதல் சிறப்பு விமானம் மூலம் 212 இந்தியர்கள் பத்திரமாக டெல்லி வந்தடைந்தனர். அவர்களை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்றார். நாடு திரும்பிய இந்தியர்கள், தங்களை பத்திரமாக அழைத்து வந்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை அழைத்து வரும் அடுத்த சிறப்பு விமானம் நாளை இயக்கப்படும் என்றும் அதன் மூலம் மேலும் அதிகமான இந்தியர்கள் தாயகம் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் இஸ்ரேலுக்கான இந்தியத் தூதர் சஞ்சீவ் சிங்லா தெரிவித்துள்ளார்.
‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்பிய 212 இந்தியர்களில் 21 தமிழர்களும் அடங்குவர். அதில் 14 பேர் டெல்லியில் இருந்து இன்று காலை சென்னை வந்தடைந்த நிலையில், 7 பேர் கோவை விமான நிலையம் வந்தனர். அவர்களை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் வரவேற்றார்.
இஸ்ரேலிலிருந்து கோவை வந்தவர்களில் ஒருவரான டாக்டர் ராஜலட்சுமி நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “இந்திய அரசாங்கம் எங்களை பாதுகாப்பாக அழைத்து வந்தது. தமிழ்நாடு அரசு எங்களை வரவேற்று உணவு, டிக்கெட் உள்ளிட்ட வசதிகளை வழங்கி, வீடு திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
இஸ்ரேலில் ஒவ்வொரு நொடியும் பயத்துடனே இருந்தோம். அடுத்து என்ன நடக்கும் என்றே தெரியாது. காஸாவை ஒட்டிய பகுதிகள் தான் மிகுந்த பதற்றத்துடனே இருக்கிறது. குண்டு வெடிக்கும் போது பாதுகாப்பான இடத்தில் தங்குவதற்காக இஸ்ரேல் அரசாங்கம் அலாரம் ஒன்றை ஒவ்வொரு இடத்திலும் அடிக்க செய்வார்கள். நாங்கள் பாதுகாப்பான இடத்துக்கு சென்று விடுவோம். சிறிது நேரம் கழித்து நாங்கள் மீண்டும் வெளியே வருவோம்.
இஸ்ரேல் அரசாங்கம் மக்கள் ஒவ்வொருவரையும் பாதுகாப்பாக தங்க வைக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். நிலைமை சரியான பிறகு வரச் சொல்லி இஸ்ரேல் அரசாங்கம் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தங்கள் நாட்டை காப்பாற்ற அங்குள்ள ஒவ்வொரு படித்த இஸ்ரேல் குடிமகனும் ராணுவதற்கு உதவி செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
இஸ்ரேல் ஒரு நல்ல நாடு. படிப்பதற்கும், வேலைவாய்ப்பு கிடைப்பதற்கும் ஏற்ற நாடு. மீண்டும் அங்கு எப்போது போவேன் என்ற ஏக்கம் உள்ளது. மக்களை பாதுகாப்பதற்காகவும், அவர்களுக்கு வழிகாட்டுவதற்காகவும், ஆப் ஒன்றை உருவாக்கி இஸ்ரேல் அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு உதவி செய்து வருகிறது” என்று தெரிவித்தார்.









