திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று (டிச. 29) திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு ‘வெல்லும் தமிழ்ப்பெண்கள்’ என்ற தலைப்பில் இன்று (டிச.29) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. மாநாட்டுக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்குகிறார்.
இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
இதில் பங்கேற்பதற்காக முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். அங்கிருந்து சின்னியம்பாளையத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் முதலமைச்சர், மாலை 4 மணிக்கு கார் மூலம் பல்லடம் செல்கிறார். மாநாடு முடிந்த பின்னர் இரவு கோவை விமான நிலையத்துக்கு வந்து, சென்னைக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.
இந்த மாநாட்டில், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். இதில், 234 சட்டமன்ற தொகுதிகளில் இருந்தும் சுமார் 2 லட்சம் பெண்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்கள் நலன் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மகளிரணி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், 2,200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.







