எங்களுக்கு மிக பெரிய எடுத்துக்காட்டாக இருந்தவர் விஜயகாந்த் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை அடுத்து அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பின்னர் நாளை மாலை இறுதி மரியாதை நடைபெறும் என தேமுதிக தலைமை அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுவதுமிலிருந்து அவரது ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த அவரது உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்துக்கு படையெடுத்து வருகின்றனர்.
அதே போன்று திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித்தலைவர்களும் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் பலர் நேரில் சென்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் அலையலையாய் வந்து அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
விஜய்காந்த் மறைவு தமிழக மக்களுக்கு ஒரு மிக பெரிய இழப்பு. திரைத்துறை மட்டுமல்லாமல் அரசியலிலும் மிக பெரிய தடம் பதித்தவர். அவருடைய கொள்கையில் உறுதியாக இருந்தவர் விஜய்காந்த். எங்களுக்கு மிக பெரிய எடுத்துக்காட்டாக இருந்தவர். மக்களவை தேர்தலில் எனக்கு பிரச்சாரம் செய்து என்னுடைய வெற்றிக்காக பாடுபட்டவர். தைரியசாலி கொள்கை பிடிப்பு மிக்கவர். தைரியமாக முடிவுகளை எடுத்தவர். எங்களை போன்றவருக்கு எடுத்துக்காட்டு. ஆளுங்கட்சி ஆண்ட கட்சிக்கு மாற்று உண்டென புதிய கட்சி தொடங்கி மக்கள் மத்தியில் நம்பிக்கை விதைத்தவர். என் மீதும் மருத்துவர் மீதும் அன்பு கொண்டவர். அவரது குடும்பத்தாருக்கும் தொண்டர்களுக்கும் லட்ச கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.







