மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக் கூடிய வெள்ளந்தியான மனிதர் விஜய்காந்த் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை அடுத்து அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பின்னர் நாளை மாலை இறுதி மரியாதை நடைபெறும் என தேமுதிக தலைமை அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுவதுமிலிருந்து அவரது ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த அவரது உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்துக்கு படையெடுத்து வருகின்றனர்.
அதே போன்று திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித்தலைவர்களும் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் பலர் நேரில் சென்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் அலையலையாய் வந்து அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேரில் சென்று விஜயகாந்து உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
கேப்டன் விஜயகாந்த் மறைவு தேமுதிகவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களுக்கும் இழப்பு. எளிய மக்களின் வாழ்வியலை பேசிய சாதிய கட்டமைப்புக்கு எதிரான படங்களில் நடித்தவர். தனக்கென தனி முத்திரை பதித்தவர். தேமுதிக கட்சியை தொடங்கிய சில வருடங்களில் எதிர் கட்சித் தலைவராக ஆனார். திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு மாற்று கட்சியாகவும் மாறியது தேமுதிக. மனதில் பட்டதை வெளிப்படையாக பேச கூடய வெள்ளந்தியான மனிதர் விஜய்காந்த். அவரை இழந்து வாடும் கட்சியினருக்கும் திரை உலகினருக்கும், குடும்பத்திற்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் வழக்கம் அவரிடம் இல்லை. நல்ல உடல்நிலையில் இருந்தால் அசைக்க முடியாத தலைவர் ஆகியிருப்பார். என்னை பார்க்கிறபொதெல்லாம் ஆரதழுவுகிற அரவணைக்கிற விதமாக பழகியுள்ளார். விசிக சார்பாக செம்மாந்த வீரவணக்கத்தை செலுத்துகிறோம்.







