தமிழகத்தில் அஜித்தை விட விஜய் தான் பெரிய நடிகர் என்று வாரிசு படத்தின்
தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார்.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தை தெலுங்கு
தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். இப்படம் வரும் பொங்கலுக்கு
வெளியாகிறது. மேலும் பொங்கலுக்கு அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும்
வெளியாகிறது.

தமிழகத்தில் துணிவு படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் வாரிசு
படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவும் வெளியிடுகிறது. இரண்டு முன்னணி
நடிகர்களின் படங்கள் வெளியாவதால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல்
ஏற்பட்டது. இருப்பினும் இரண்டு படங்களுக்கும் தலா 400 திரையரங்குகள்
ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கு மீடியாவுக்கு பேட்டியளித்த தயாரிப்பாளர் தில்
ராஜூ, அஜித் குறித்தும் ரெட் ஜெயன்ட் குறித்தும் பேசியது விவாதப் பொருளாகியுள்ளது. அதாவது தமிழகத்தில் இரண்டு படங்களுக்கும் சரிசமமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அஜித்தை விட விஜய் பெரிய நடிகர் என்பதால் கூடுதலாக 50 திரைகள் கேட்டபோது உதயநிதி மறுத்துவிட்டார்.
எனவே உதயநிதியை சந்தித்து மீண்டும் பேசவுள்ளதாக தெரிவித்திருந்தார். தில் ராஜூவின் இந்த பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் ஒருவரை ஒருவர் சமூக வலைத்தளங்களில் தாக்கிக்கொண்டிருக்கும் சூழலில் தில் ராஜூவின் இந்த பேச்சு பிரச்சினையை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.







