அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் காவல் தெய்வம், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 78-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 25.2.2026 புதன் கிழமை முதல் 27.2.2026 வெள்ளிக் கிழமை வரை மூன்று நாட்கள், ‘இதய தெய்வம் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 78-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்’, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டங்களிலும்; கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.
பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள்; அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது. கழக சட்டமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகளும், தாங்கள் சார்ந்த மாவட்டத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.
மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கான நிகழ்ச்சிகளை, கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளுடனும் இணைந்து, சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 78-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விபரங்களை தலைமைக் கழகத்திற்கும், “நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழுக்கும்” அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







