ஆண்டாள், ஔவையார் லட்சியத்தால் உத்வேகம் பெற்றுள்ளோம்: பிரதமர் மோடி

தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த நாங்கள் ஆண்டாள், ஔவையார் ஆகியோரின் லட்சியத்தால் உத்வேகம் பெற்றுள்ளோம். இந்த சமுதாயத்தின் வளர்ச்சி என்பது பெண்களுடைய வளர்ச்சி இல்லாமல் சாத்தியப்படாது. அதனால்தான் எங்களுடைய அத்தனை திட்டங்களும் பெண்களுடைய சக்தியை…

தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த நாங்கள் ஆண்டாள், ஔவையார் ஆகியோரின் லட்சியத்தால் உத்வேகம் பெற்றுள்ளோம். இந்த சமுதாயத்தின் வளர்ச்சி என்பது பெண்களுடைய வளர்ச்சி இல்லாமல் சாத்தியப்படாது. அதனால்தான் எங்களுடைய அத்தனை திட்டங்களும் பெண்களுடைய சக்தியை மேம்படுத்தும் வகையில் உருவாக்கியுள்ளோம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்த பிரதமர் நரேந்திர மோடி இன்று திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது, “பெண்களை இழிவுபடுத்தும் திமுகவினரை தமிழர்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். திமுகவின் முக்கிய தலைவர்கள் பெண்கள் குறித்து இழிவான கருத்துகளைத் தெரிவித்துவருகிறார்கள். ஆனால் அதற்கு அக்கட்சி தலைவர்கள் எவ்வித கண்டனமும் தெரிவிக்காமல் உள்ளார்.
கடந்த 1989-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் திமுக தலைவர்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை எப்படி நடத்தினார்கள் என்பதை தமிழக மக்கள் அறிவார்கள். திமுக காங்கிரஸ் கூட்டணி பெண்களின் முன்னேற்றத்துக்கு உதவமாட்டார்கள். அவர்கள் ஆட்சி காலத்தில் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து இருந்தது.

தூய்மை பாரத திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறைகள் பல லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்துள்ளனர். அதேபோல் உஜ்வாலா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள 32 லட்சம் பெண்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் 3 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. அதேபோல் நகர்ப்புற பகுதியில் 3.8 லட்சம் வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது. இந்த வீடுகள் எல்லாம் பெண்கள் பெயரில் இருக்கவேண்டும் என நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம். மகளிர் பேறுகால விடுமுறை திட்டத்தின் கீழ் 10 லட்சம் மகளிர் உதவி பெற்று இருக்கிறார்கள். இதுபோன்ற திட்டங்கள் பெண்கள் ஊக்கப்படுத்தவும் அவர்களுடைய வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவியாக இருக்கும்.

கொங்கு நாடு பகுதியில் உள்ள மக்கள் இந்நாட்டிற்குச் செல்வத்தைச் சேர்த்து கொண்டியிருக்கிறார்கள். என்னுடைய தலைமையிலான அரசு தொழில் மற்றும் வியாபார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம். சிறு விவசாயிகளை இடைத்தரகர்களிடம் இருந்து காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது.

வேளான் பிரச்சனைகளைத் தீர்க்க நீர் ஆதாரங்களை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறது. புதிய நீர் பாசன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழகத்தில் குடிநீர் இணைப்பு திட்டத்தின் வாயிலான 16 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள்.

பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து விஷயங்களையும் எங்களுடைய அரசு நிறைவேற்றும். பாஜக தேர்தல் அறிக்கையை மக்கள் அனைவரும் படிக்கவேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி மக்களின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் வடிவமைத்திருக்கிறோம்” என பிரதமர் மோடி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.