கோதாவரி – காவேரி இணைப்பு திட்டம்: பிரதமர் மோடியிடம் முதல்வர் கோரிக்கை

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க மாநிலத்தின் நீண்ட நாள் கோரிக்கையான கோதாவரி – காவேரி இணைப்பு திட்டத்தை பிரதமர் மோடி நிறைவேற்றி தரவேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக…

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க மாநிலத்தின் நீண்ட நாள் கோரிக்கையான கோதாவரி – காவேரி இணைப்பு திட்டத்தை பிரதமர் மோடி நிறைவேற்றி தரவேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்த பிரதமர் நரேந்திர மோடி இன்று திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.இக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக மாநில தலைவர் எல். முருகன், பாஜக வேட்பாளர்கள் வானதி சினீவாசன், அண்ணாமலை மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி, “மத்திய அரசு நிதியுதவி அளித்ததால் தமிழகம் இன்று உள்கட்டமைப்பில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது. இதற்காகப் பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாடு நீர் பற்றாக்குறை மாநிலமாகும். அந்த நீர் பற்றாக்குறையை போக்குவதற்காக அதிமுக தலைவி மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தொடர்ந்து கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை வலியுறுத்தி வந்தார். அந்த திட்டத்தை கொண்டுவந்தால் தமிழ்நாடு மக்கள் ஏற்றம் பெறுவார்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள்.

பெரும்பாலான மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினை இல்லாத நிலை உருவாகும். அந்த திட்டத்தை பாரத பிரதமர் மோடி நிறைவேற்றித் தருவார்கள். அதற்கான முயற்சியை அவர்கள் எடுப்பார்கள் என மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மிகப்பெரிய திட்டம் வரவேண்டும் என்றால் மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமான சூழ்நிலை இருந்தால்தான் இதுபோன்ற திட்டங்களை கொண்டுவரமுடியும்.
மத்திய அரசு நிதியுதவியுடன் தமிழகத்தில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டுவருகிறது.

கடந்த 2019 -ஆண்டு தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தியபோது 304 தொழிற்சாலைகள் ரூ.3 லட்சத்து 500 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர்.இந்த தொழிற்சாலைகள் தமிழகத்திற்கும் வரும்போது நேரடியாக 5 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். மறைமுகமாக 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஈரோடு, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் கனவுத் திட்டம் அத்திக்கடவு அவிநாசி திட்டம். இந்த கனவு திட்டத்தையும் அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது. இதற்காக ரூ. 1,652 கோடி திட்டத்தை அறிவித்து அதிமுக அரசால் அடிகல் நாட்டப்பட்டு வேகமாக பணிகள் நடைபெற்றுவருகிறது. இத்திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றப்படும். நொய்யல் ஆற்றை நவீனப்படுத்த ரூ. 230 கோடி நிதியை ஒதுக்கப்பட்டுள்ளது. நொய்யல் ஆறு பணிகள் 60 சதவீதம் முடிவடைந்துள்ளது.

கீழ்பவானி பசான திட்டம் நவீனப்படுத்த ரூ.933 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒட்டன்சத்திரம், தாராபுரம் அவிநாசிபாளையம் நான்கு வழி சாலை பணிகளுக்காக ரூ.724 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற ரூ. 950 ஒதுக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டத்துக்கு ரூ. 630 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அவிநாசி, காங்கேயம், பல்லடம் பகுதிகளில் அரசு கலைக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு தமிழகத்தில் 100: 34 பேர் உயர்கல்வி பெற்றவர்களாக இருந்தார்கள். தற்போது 100: 49 பேர் உயர்கல்வி பெற்று இருக்கிறார்கள்.


தமிழகத்தில் 248 தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. புதியதாக 117 தொடக்கப் பள்ளி நடுநிலை பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளது. 1079 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது. 604 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 52 லட்சம் 31-ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் கற்போர் எண்ணிக்கை தரம் உயர்ந்துள்ளது. திருமண உதவித் தொகை திட்டத்தின் கீழ் 12 லட்சத்து 51 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாட்டிலேயே பிசிஆர் பரிசோதனை மூலமாக கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு உதவியுடன் அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது. வருகின்ற சட்டப் பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களைப் பல்லாயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் மக்கள் வெற்றிபெறச் செய்யவேண்டும்” என முதல்வர் பழனிசாமி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.