கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக மாற்று துறைமுகம் அமைக்க விடமாட்டோம் என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதிப்பட கூறியுள்ளார்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். ஆரல்வாய்மொழியில் நடைபெற்ற பரப்புரையின்போது பேசிய அவர், மறைந்த எம்.பி. வசந்தகுமார் விட்டுச்சென்ற பணிகளை கவனிக்க வேண்டும் என்பதற்காகவே அவரது மகன் விஜய் வசந்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், குளச்சலில் வர்த்தக துறைமுகம், கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழில் பூங்கா, இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என வாக்குறுதி அளித்த பொன்.ராதாகிருஷ்ணன் எதையாவது நிறைவேற்றியுள்ளாரா எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் மீனவர்களின் உரிமைகளை மீட்க அனைத்து வகையான நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என தெரிவித்தார்.







