தேர்தல் பரப்புரையின்போது எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றவர்களை விமர்சனம் செய்யும்போது சித்தாந்த ரீதியாக விமர்சனம் செய்யவேண்டும். சித்தாந்த ரீதியாக திக, திமுகவை கடுமையாக விமர்சிப்பவன் நான் என காரைக்குடி தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் ஹெச்.ராஜா பாஜகவின் கூடுதல் துணை தேர்தல் அறிக்கை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், திமுகவினர் முதலமைச்சரை மட்டும் காயப்படுத்தவில்லை, பெண் இனத்தையே காயப்படுத்தி விட்டதாகக் குற்றம்சாட்டினார். அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை விமர்சிப்பதற்கு ஒன்றுமில்லை என்பதால், இது போன்ற விமர்சனங்களில் திமுகவினர் இறங்கிவிட்டார்கள்.
ஸ்டாலின் பெண்மையை மதிப்பவராக இருந்தால் கட்சியிருந்து ஆ.ராசாவை நீக்க வேண்டும். நான் மற்ற கட்சியில் உள்ளவர்களைத் தனி நபராக விமர்சிப்பது இல்லை. அரசியலில் கருத்தியல் ரீதியாகப் பிரச்சனைகளை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். சித்தாந்த ரீதியாக திக , திமுகவை கடுமையாக விமர்சிப்பவன் நான். தனி நபர் பற்றி விமர்சிப்பது இல்லை” என அவர் கூறினார்.







