மதுரையில் என்டிஏ பொதுக்கூட்டத்திற்கு பந்தல்கால் நடப்பட்ட பிறகு தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “நான் யார் மனதும் புண்படக்கூடாது என நினைப்பவன். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. திமுக கூட்டணியில் தான் விரிசல் இருக்கிறதே தவிர தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு இல்லை.
திமுக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என தினந்தோறும் மாணிக்கம் தாகூர் பேட்டி கொடுத்து வருகிறார். திமுக கூட்டணி தான் வலுவாக இல்லை. எங்கள் அண்ணன் இபிஎஸ் மற்றும் பல கூட்டணி கட்சிகளால் பாஜக பலமாக உள்ளது. இபிஎஸ் தலைமையில் நிச்சயம் நல்லாட்சி மலரும். முதலில் தவெக தலைவர் விஜய் கட்சிக்கு கொள்கை இருக்கிறதா? அவர்களுடைய கொள்கைகளை புத்தகமாக வெளியிட்டு, ‘இது எங்களுடைய கொள்கை, இந்த கொள்கைகளுக்கு மாறானது பாஜக’ என்று சொன்னால் பரவாயில்லை. கொள்கை என்று மட்டும் வெறும் பேப்பரில் எழுதி வைத்திருந்தால் எப்படி ஒத்துக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.







