தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை மையம் விரைவில் திறக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவர் மருந்து பயன்படுத்தப்படுகிறது. எனினும், சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் இந்த மருந்து தேவையில்லை என மருத்துவர்கள் கூறி வரும் நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் தமிழக அரசு திறந்துள்ள உயிர்காக்கும் மருந்துகள் விற்பனை கவுண்ட்டர்களில், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதையடுத்து, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ரெம்டெசிவர் உள்ளிட்ட உயிர்காக்கும் மருந்துகளை விற்பனை செய்ய கவுண்டர்களை திறக்குமாறு, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில், முதலமைச்சராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். இதையடுத்து, மதுரை, கோவை, திருச்சி போன்ற முக்கிய நகரங்களில், அரசு சார்பில் புதிய விற்பனை மையங்கள் திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.







