முதல்வராக நாளை பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 9 மணிக்கு தமிழக முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று முன்தினம் ஆளுநரிடம் வழங்கினார். அன்று மாலை,…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 9 மணிக்கு தமிழக முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று முன்தினம் ஆளுநரிடம் வழங்கினார். அன்று மாலை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை திமுக குழு தலைவராக, ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து நேற்று காலை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை மு.க.ஸ்டாலின் சந்தித்தார். ஸ்டாலினுக்கு, ஆளுநர் பொன்னாடை போர்த்தி மலர்கொத்து வழங்கி, வாழ்த்து தெரிவித்தார். அப்போது, சட்டப்பேரவை திமுக குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை ஆளுநரிடம் வழங்கிய ஸ்டாலின் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக முதலமைச்சராக நியமித்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பதவியேற்க வருமாறு, ஸ்டாலினுக்கு, முறைப்படி அழைப்பு விடுத்தார். இதற்கான கடிதத்தை, ஆளுநரின் செயலாளர் ஆனந்தராவ் பாட்டீல், ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்து வழங்கினார்.

ஆளுநர் மாளிகையில் நாளை காலை, 9 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில், தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார். அவருக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். ஸ்டாலினுடன் அமைச்சர்களாக 28 பேர் பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் முன்னிலையில், அனைத்து அமைச்சர்களும் பதவியேற்பு உறுதிமொழியை எடுத்துக் கொள்ள உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக பதவியேற்பு விழா, எளிமையாக நடைபெற உள்ளது. விழாவில் பங்கேற்க, குறைந்த நபர்களை மட்டும் அழைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.