கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் பாண்டு கொரோனா நோய்த் தொற்று காரணமாக இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 74. ஓவியக் கல்லூரி மாணவரான நடிகர் பாண்டு தொழிலதிபர்,…

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் பாண்டு கொரோனா நோய்த் தொற்று காரணமாக இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 74.

ஓவியக் கல்லூரி மாணவரான நடிகர் பாண்டு தொழிலதிபர், நடிகர், நகைச்சுவை பேச்சாளர் என பன்முக திறமைகளைக் கொண்டவர். தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நகைச்சுவை வேடங்களிலும் நடித்து வந்த நடிகர் பாண்டு தன்னுடைய வித்தியாசமான வசன உச்சரிப்பாலும் வாயசைவாலும் மக்களின் மனங்களைக் கவர்ந்தவர்.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக நடிகர் பாண்டு, அவரது மனைவி குமுதா ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி நடிகர் பாண்டுவின் உயிர் பிரிந்தது. அவரது மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

பாண்டு-குமுதா தம்பதியினருக்குப் பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை வடிவமைத்ததும் நடிகர் பாண்டு என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பெரியார் திடலில் உள்ள உலோக பெயர் எழுத்துகளையும் வடிவமைத்தவர் நடிகர் பாண்டு. தமிழ் எழுத்துகளை உலோகத்தில் வடிவமைத்துப் பெயர் பலகைகளாகத் தமிழகத்தில் அறிமுகப்படுத்திய பெருமை நடிகர் பாண்டுவையேச் சேரும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.