அதிமுக கூட்டணி என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் தீங்கு விளைவிக்கும் கூட்டணி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.
விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை தொல். திருமாவளவன் வெளியிட்டார் அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது, தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது தமிழக அரசின் மெத்தன போக்கினாலும் இந்திய அரசின் விரோத போக்கினால் இந்த நடவடிக்கை நடைபெறுவதாக குற்றம்சாட்டினார்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். மேலும் கச்சத்தீவை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
அதிமுக, பாஜக, பாமக கூட்டணி என்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கு தீங்கு விளைவிக்கும் அணி என்றும் இதை மக்கள் முறியடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அப்பாவி மக்கள் மற்றும் வணிகர்களின் பணத்தை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றுவதாகவும் ஆளுங்கட்சியினரைக் கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் செயல்படவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.







