”மக்கள் அளிக்கும் மனு வெறும் காகிதம் அல்ல. ஒரு மனிதரின் வாழ்க்கை” என மாவட்ட ஆட்சித்தலைவர்கள் ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரையில் ஐந்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆய்வு நடபெற்று வருகிறது. தலைமை செயலாளர் மற்றும் ஐந்து மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். ஐந்து மாவட்டத்தில் நடைபெற்ற திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குரி குறித்து இக்கூட்டத்தில் முதலமைச்சர் ஆய்வு நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சித்தலைவர்களிடம் பேசியதாவது..
கிராமப்புற மக்களின் வருமானத்தை பெருக்கும் திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தென் மாவட்டத்தை தொழில் ரீதியாக மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வேலை உறுதி திட்டங்களில் கீழ் வேலை வழங்கும் சராசரி நாட்களை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூக நீதியின் குரலே இப்போது ஓங்கி ஒலிக்கிறது. வேலை, பொருளாதாரம் உள்ளிட்டவையில் அனைவருக்கும் முன்னுரிமை வேண்டும். சமுதாயத்தின் பின்தங்கிய மக்கள், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய மக்கள், திருநங்கைகள் கோரிக்கைகளை அறிந்து நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை.
சிவகங்கையில் புதிய தொழில் நிறுவனங்கள் உருவாக்க வேண்டும். தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பழ, காய்கறி விவசாயங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மதுரையின் நகர் பகுதியை மையமாக வைத்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அரசின் திட்டங்களை சிந்தாமல் சிதறாமல் மக்களிடம் சேர்க்கும் பொறுப்பு ஆட்சியர்களுக்கே உண்டு.
அண்ணா மறுமலர்ச்சி பணிகளை துரிதப்படுத்த வேண்டும். பட்டா மாறுதல், சான்றிதழ்களை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க வேண்டியது மாவட்ட ஆட்சியர்கள் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய பணியாகும். மக்களை பொருத்த வரை ஆட்சியர்கள் தான் அரசு, அவர்களின் தேவைகளை நீங்கள் தான் பூர்த்தி செய்ய வேண்டும். மக்கள் அளிக்கும் மனு என்பது வெறும் காகிதம் அல்ல. அது ஒரு மனிதரின் வாழ்க்கை” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதனையடுத்து மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் வாயிலில் காத்திருந்த 200 க்கும் மேற்பட்ட பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
– யாழன்