மயிலாடுதுறையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களை , மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்ததோடு , ஹோலி பண்டிகையை முன்னிட்டு அவர்களுக்கு இனிப்புகளை ஊட்டி விட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மயிலாடுதுறையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வரும், வடமாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் எஸ்.பி நிஷா உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்று தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தனர். மேலும் தொழிலாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
அப்போது மாவட்டம் முழுவதும் குஜராத் ,ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ,கல்கத்தா ,அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் பணி வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் வட மாநில தொழிலாளர்கள் ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
தொடர்ந்து புகார்கள் ஏதேனும் இருப்பின் உதவி எண் 0421 – 2203313 , 9498101300 , 9498101320 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை அடுத்து வட மாநில தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தொழிலாளர்களுக்கு இனிப்புகளை ஊட்டி விட்டு தனது வாழ்த்துக்களையும் தொழிலாளர்களுக்கு தெரிவித்து கொண்டார்.
- பி.ஜேம்ஸ் லிசா









