விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதம் செல்லும் – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நடிகர் விஜய்யின் வீட்டிலும், அலுவலகத்திலும் கடந்த 2015-ம் ஆண்டு வருமான வரித்துறை திடீர் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், கடந்த 2015-2016-ம் நிதியாண்டிற்கான வருமானம் 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் என்று விஜய் கணக்கு காட்டியிருந்தார்.

அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், 2015-ம் ஆண்டு கைப்பற்றிய ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்த போது, புலி திரைப் படத்தில் நடிப்பதற்காக அவர் பெற்ற ரூ.15 கோடியை கணக்கில் காட்டவில்லை என்று கண்டுபிடித்தனர். இவ்வாறு வருமானத்தை மறைத்ததற்காக விஜய்க்கு ரூ.1 கோடியே 50 லட்சத்தை அபராதம் விதித்து கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 30-ந்தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நடந்தது. அனைத்துத ரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் “விஜய் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. விஜய்க்கு வருமான வரித்துறை பிறப்பித்த ரூ.1.50 கோடி அபராதம் செல்லும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.