பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நாளை நடைபெற இருந்த மாவட்டத் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட குழு கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் இடைவிடாத விமர்சனங்கள், அக்கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற காரணமாக அமைந்தது. இது தமிழ்நாட்டு அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் இரண்டாவது பெரிய கட்சி என்ற அடிப்படையில் அக்கூட்டணியில் அதிமுக முக்கிய இடம் வகித்தது.
இந்நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது, பாஜக வட்டாரத்தில் அதிர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. இந்த கூட்டணி முறிவு தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்குமாயின் அது தமிழ்நாட்டில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் நாளை அண்ணாமலை கூட்டியிருந்த தமிழ்நாடு பாஜக மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை நாளை பங்கேற்க முடியாத காரணத்தினால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தை அண்ணாமலையே ஒத்திவைத்தாரா? அல்லது டெல்லி மேலிடம் தலையிட்டு ரத்து செய்ய சொன்னதா? என்பது குறித்து உறுதியான தகவல் ஏதும் இல்லை.
டெல்லியில் இன்றுதான் அதிகாரப்பூர்வமாக பாஜக தேசிய தலைவர்களை அண்ணாமலை சந்திக்கக் கூடும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள். இதனால் அண்ணாமலை உடனடியாக சென்னை திரும்பமாட்டார் எனவும் கூறப்படுகிறது.







