மருத்துவரிடம் மரியாதை குறைவாக நடந்த மதுரை மாநகராட்சி நகர் நல அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இரண்டு மகப்பேறு தாய்மார்கள் இறப்புக்குப் பிறகு மருத்துவர்கள் ஜோடிக்கப்பட்ட கேஸ் ஷீட்கள் & நோயாளி பதிவுகள் பின்னணியில் இருந்த மருத்துவரை சஸ்பெண்ட் செய்ய ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார். இரண்டு கர்ப்பிணிகள் உயிரிழந்த பிறகு அவர்களுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டதும், எந்த ஒரு சிகிச்சை மேற்கொள்ளாமல் சிகிச்சை மேற்கொண்டதாக கர்ப்பிணிகள் உயிரிழந்த பிறகு ஆவணங்கள் அனைத்தும் திருத்தப்பட்டு இருப்பதாகவும் மதுரை மாவட்ட ஆட்சியர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக அரசு மருத்துவ சங்க தலைவர் செந்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது :
“மகப்பேறு இறப்புக்கு பிந்தைய கேஸ் ஷீட்டை மதுரை அரசு மருத்துவமனை தங்களுக்கு சாதகமாக ஜோடித்தது என்பது வெளிப்படையானது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மகப்பேறு தாய்மார்கள் இறப்பு குறித்து மருத்துவர்கள் மீது மாநகராட்சி சுகாதார அலுவலர் வேண்டும் எனறே தவறான தகவல்களை பரப்பி வருகிறார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சிகிச்சை குறித்தும்,கேஸ் சீட் உள்ளிட்ட மருத்துவ ரெக்கார்டுகளை புகைப்படம் எடுத்தும், மேலும் அங்குள்ள மருத்துவர்களை பணி செய்யவிடாமல் தடுத்த மாநகராட்சி நகர் நல அலுவலரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
அது வரை மதுரையில் அரசு மருத்துவமனையில் அக்டோபர் 3 முதல் அவசரமில்லாத அறுவை சிகிச்சையை புறக்கணித்து போராட்டம் நடத்த உள்ளோம். மதுரை மாவட்ட ஆட்சியர் 2 கர்ப்பிணி பெண் உயிரிழப்பு குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையை அவர் மாநில ஆய்வுக்கு தான் அனுப்பி இருக்க வேண்டும்.
மதுரை மாவட்ட ஆட்சியருக்கு தவறான தகவல் கொடுத்து, அதனால் அவர் தவறாக அறிக்கை வெளியிட்டு உள்ளார். மருத்துவமனையில் இருந்த ஆவணங்கள் ஏதும் தவறாக பயன்படுத்தவில்லை. மாவட்ட ஆட்சியர், மேல் நடவடிக்கைக்கு தான் பரிந்துரை செய்ய வேண்டுமே தவிர,சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூற முடியாது.
இதனையடுத்து அதிகார எல்லையை மீறிய மாநகராட்சி நகர் நல அலுவலர் தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் அவர் மீது விசாரணை குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழகத்தில் இரண்டாவது பெரிய மகப்பேறு துறையான மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெரும்பான்மையான நோயாளிகள் கடைசி நேரத்தில் பல பிரச்னைகளுடன் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் ஆனால் சில நேரங்களில் ஏற்படும் மரணங்கள் குறித்து ஆடிட் நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணையின் போது மருத்துவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டு அதற்கு பதில்களை தெளிவாக மருத்துவர்கள் கூறும் நிலையில் விசாரணை குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்கிறது. இவ்வாறு உடனடியாக மருத்துவர்களை விசாரிக்கும் ஆடிட்டுக்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
இதனை அரசு நிறைவேற்றவில்லை என்றால் அக்டோபர் மூன்றாம் தேதி முதல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகள் தவிர்க்கப்படும். மேலும் மருத்துவர்கள் தரப்பில் போராட்டம் நடைபெறும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.







