கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயி : காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலர்!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயியை ஊராட்சி செயலர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபை கூட்டங்கள்…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயியை ஊராட்சி செயலர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பிள்ளையார்குளம் ஊராட்சி கங்காகுளததில் கிராம சபை கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த விவசாயி அம்மையப்பர் என்பவர் சுழற்சி முறையில் அனைத்து பகுதிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவித்தார். மேலும் அவர் பேசும்போது, ஊராட்சி செயலர் தங்கபாண்டியனை மாவட்ட ஆட்சியர் மாற்றி 4 மாதம் ஆகிவிட்டது. ஏன் மீண்டும் அவர் இங்கு வந்துள்ளார் என கேள்வி எழுப்பினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஊராட்சி செயலர் தங்கபாண்டியன், விவசாயி அம்மையப்பரை காலால் எட்டி உதைத்தார். மேலும் ஊராட்சி செயலருக்கு ஆதரவாக மற்றொருவரும் அவரின் கன்னத்தில் அறைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கிராம மக்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர்.

ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் காலால் எட்டி உதைத்த நிலையில் காயம் அடைந்த விவசாயி அம்மையப்பர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாயியை தாக்கிய பிள்ளையார்குளம் ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் மக்கள் கூறி வந்ததாகவும், இதனால் அவரை கீழராஜகுலராமன் ஊராட்சிக்கு மாவட்ட ஆட்சியர் மாற்றி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.