முக்கியச் செய்திகள் ஆசிரியர் தேர்வு கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

அதிமுகவில் இரட்டை தலைமை தொடங்கி ஒற்றை தலைமை கோரிக்கை வரை கடந்து வந்த பாதை


ரா தங்கபாண்டியன்

அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியை வழிநடத்தி சென்ற நிலையில், ஒற்றை தலைமைக்கான வழக்கு நீடித்து வருவது குறித்து ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்..

 

அதிமுக என்ற அரசியல் கட்சியின் பொதுச்செயலாளராக 28 ஆண்டுகளாகவும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதினைந்து ஆண்டுகளாக இருந்து, மிகப்பெரும் அரசியல் ஆளுமையாக திகழ்ந்த ஜெ.ஜெயலலிதா , முதலமைச்சர் பதவியில் இருந்த போதே 2016 ம் ஆண்டு டிசம்பர் மாதம், ஐந்தாம் தேதி மறைந்தார். அவர் விட்டு சென்ற ஆட்சி 2021 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை தொடர்ந்தது. ஜெயலலிதாவின் மறைவையடுத்து, 2 மாதங்கள் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், ஓ.பன்னீர் செல்வம் தமிழ்நாடு முதலமைச்சராகவும் பதவி வகித்தனர். பிறகு நான்கு ஆண்டுகள் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவி வகித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தர்மயுத்தத்துக்கு பின் மீண்டும், அதிமுகவில் மீண்டும் இணைந்த ஓ.பி.எஸ், ஆட்சியில் துணை முதலமைச்சரானர். கட்சியின் விதிகளை திருத்தி, பொதுச்செயலாளர் பதவிக்கு பதிலாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கி அப்பதவியில் தொடர்ந்தார் ஓ.பி.எஸ் . இணை ஒருங்கிணைப்பாளராக இ.பி.எஸ் தேர்வானார். 2021 ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகவும் நிறுத்தப்பட்டார் இ.பி.எஸ். தேர்தல் தோல்விக்கு பின் தான் அதிமுக வில் புகைச்சல் ஆரம்பமானது. ஆனாலும், சட்ட பேரவை அதிமுக குழுத்தலைவராகவும்,தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராகவும் இ.பி.எஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். வழக்கம் போல் துணைத்தலைவர் பதவி ஓ.பி.எஸ் க்கு வழங்கப்பட்டது.

 

அதிமுகவை வழிநடத்துவது குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரிடையே கருத்து வேறுபாடு நீரு பூத்த நெருப்பாக இருந்து வந்தது. சமீபத்தில் நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் அதிக அளவில் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் வென்றதாலும், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தீர்மானம் இயற்றியதாலும் அதிமுகவுக்குள் பெரும் விவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து, அதிமுக-வை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இரு அணியினரும் நீதிமன்றம் சென்றதை கால வாரியாக பார்க்கலாம்..

2022 ஏப்ரல் 6 தேதி :
அதிமுக தலைமை அலுவலகத்தில் உட்கட்சித் தேர்தல் குறித்து ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் ஆலோசனை. நிர்வாகிகளிடையே வாக்குவாதம். கட்சி பதவிகளில் இ.பி.எஸ் அணியினர் அதிக அளவில் இருந்ததால், ஒப்புதல் கடிதத்தில் ஓ.பி.எஸ் கையொப்பமிட மறுப்பு.

2022 ஜூன் 2 :
அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் ஜூன் 23-ல், தற்காலிக அவைத் தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் என ஓ.பி.எஸ், இ.பி.எஸ் அறிவிப்பு

2022 ஜூன் 12:
பொதுக்குழு தொடர்பாக ஜூன் 14-ம் தேதி, நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை என ஓ.பி.எஸ், இ.பி.எஸ் அறிவிப்பு..


2022 ஜூன் 14 :
ஆலோசனை கூட்டத்தில் ஓ.பி.எஸ் -இ.பி.எஸ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்பு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத்தலைமை குறித்து பெரும் பாலானோர் பேசியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு..

2022 ஜூன் 16:
ஒற்றைத் தலைமை குறித்த குழப்பம் தனக்கு மிகப்பெரிய வருத்தம் என்றும் 14 பேர் கொண்ட உயர்மட்ட குழுவின் முடிவுக்கு தலை வணங்குவேன் என்றும் ஓ.பி.எஸ் அறிவிப்பு.

2022 ஜூன் 19:
பொதுக்குழு தீர்மானங்களை இறுதி செய்ய நிர்வாகிகள் ஆலோசனை. ஓ.பி.எஸ் அதிமுக அலுவலகம் வருகை. இ.பி.எஸ் வரவில்லை. இல்லங்களில் தனியாக ஆலோசனை. முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் இருவரிடமும் பேச்சு வார்த்தை.

2022 ஜூன் 22:
வானகரம் ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலசில் நடக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என ஓ.பி.எஸ் ஆவடி மாநகர காவல் ஆணையரிடம் வழங்கிய மனு நிராகரிப்பு. அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடை இல்லை என்றும் 23 தீர்மானங்களை மட்டுமே விவாதிக்க வேண்டும் என்றும் உயர் நீதி மன்றம் உத்தரவு.


2022 ஜூன் 23:
பொதுக்குழு கூட்டத்திற்கு இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் வருகை, தமிழ்மகன் உசேன்நிரந்தர அவைத் தலைவராக நியமனம். தீர்மானங்கள் நிராகரிப்பு. பொதுக்குழுவில் இருந்து ஓ.பி.எஸ், வைத்திலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் வெளியேறினர். ஓ.பி.எஸ் மீது தண்ணீர் பாட்டில்கள் வீச்சு. ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து கண்டன முழக்கம்.

2022 ஜூன் 24:
ஒருங்கிணைப்பாளரான தன் கையெழுத்தின்றி ஜூலை 11 ம் தேதி ,அதிமுக பொதுக்குழுவை கூட்ட முடியாது என தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் முறையீடு.

2022 ஜூன் 28:
ஓ.பி.எஸ் புகாருக்கு தேர்தல் ஆணையத்தில் இ.பி.எஸ் பதில் மனு தாக்கல், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை. பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமைக்கு வற்புறுத்தல், ஓ.பி.எஸ் அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றுகிறார்.


2022 ஜூலை 6:
அதிமுக பொதுக்குழு உள்கட்சி விவகாரம் தடை விதிக்க இயலாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

2022 ஜூலை 7:
பொதுக்குழுவுக்கு தடையில்லை: கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது. இ.பி.எஸ்-க்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

2022 ஜூலை 11:
பொதுக்குழுவுக்கு தடையில்லை: தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தீர்ப்பு, பொதுக்குழுவுக்கு ஓபிஎஸ் வரவில்லை, ஆனால் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு. அதே நேரத்தில் ஓபிஎஸ் அதிமுக அலுவலகம் சென்றார். இரு தரப்பினரிடையே மோதலால், அதிமுக அலுவலகத்துக்கு சீல். இபிஎஸ்-சும், ஓபிஎஸ்-சும் மாறி மாறி கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தனர். இதனால் ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுக தலைமை அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. பிறகு நீதிமன்ற உத்தரவுக்கு பின் சீல் அகற்றப்பட்டது.

 

2022 ஜூலை 29:
பொதுக்குழு குறித்த மேல் முறையீட்டில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் வழக்கை சென்னை உயர்நீதிமன்றமே, விசாரிக்க உத்தரவு.


2022 ஆகஸ்ட் 5:
நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி குறித்து ஓ.பி.எஸ் அதிருப்தி. வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு கடிதம். நீதிபதியிடம் ஓ.பன்னீர்செல்வமும், வைரமுத்துவும் மன்னிப்பு கேட்டனர். நீதிபதி ஜெயசந்திரன் அமர்வில் ஆகஸ்ட் 10 , 11-ம் தேதிகளில் விசாரணை.

2022 ஆகஸ்ட் 17:
11 ஜூலையில் நடை பெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது. ஜூன் 23-க்கு முந்தைய நிலையே தொடரும் என தீர்ப்பு. இந்த தீர்ப்பு ஓ.பி.எஸ் சுக்கு சாதகமாக பார்க்கப்பட்டது.தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் இ.பி.எஸ் மேல் முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு விசாரித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து ஆகஸ் 25-ந்தேதி உத்தரவிட்டனர்.

2022 செப்டம்பர் 2:
தீர்ப்பில் ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்தனர். இத்தீர்ப்பின் மூலம், அதிமுக-வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்பது உறுதியானது.

 

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இனி சில மாதங்களுக்கு அதிமுகவில் சட்ட போராட்டம் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது வரை அதிமுக-வில் பரபரப்புகளுக்கு பஞ்சமிருக்காது.

 

-ரா.தங்கபாண்டியன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காற்று மாசு: டெலிவரி நிறுவனங்கள் போக்குவரத்தை மின் வாகன பயன்பாட்டிற்கு மாற்றலாம் – மக்கள் கருத்து

Dinesh A

விடுமுறை தினத்தில் ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

G SaravanaKumar

2022 ஐபிஎல்: டைட்டில் ஸ்பான்சரை கைப்பற்றியது டாடா குழுமம்

Halley Karthik