அதிமுக சார்பில் ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்பின் சாராம்சங்களை தற்போது பார்க்கலாம்.
சென்னை வானகரத்தில் ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்யக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், தீர்ப்பு வழங்கிய தனிநீதிபதி அதிமுக பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்தார். பின்னர் இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில், மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், அந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், தனி நீதிபதி வெளியிட்ட தீர்ப்பு செல்லாது என்று தெரிவித்தனர். மேலும் ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழுவை தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டியதில் தவறில்லை என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? என்பது குறித்து பிரதான வழக்கில் தான் முடிவெடுக்க முடியும் என்ற நீதிபதிகள், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து செயல்பட முடியாத நிலையில் இருவரும் சேர்ந்து தான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என உத்தரவிட முடியாது என்றனர்.
இரு தலைவர்களும் இணைந்து தான் கூட்டங்களை கூட்டவேண்டும் என்ற உத்தரவு கட்சியின் செயல்பாட்டை முடக்கிவிடும். பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி விட்டுக் கொடுத்தார். ஜூன் 23-ம் தேதி பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடராத நிலையில் ஜூன் 23-ம் தேதிக்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டும் என உத்தரவிட முடியாது என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
– இரா.நம்பிராஜன்








