பேப்பர் கப், பிளாஸ்டிக் பைகள் மீதான தடை செல்லும் – தமிழ்நாடு அரசின் உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்..!

ஒருமுறை பயன்படுத்தும் பேப்பர் கப், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பேப்பர் கப் தயாரிப்பில் மெழுகு உள்ளிட்ட உடல்நலத்திற்கு கெடு…

ஒருமுறை பயன்படுத்தும் பேப்பர் கப், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பேப்பர் கப் தயாரிப்பில் மெழுகு உள்ளிட்ட உடல்நலத்திற்கு கெடு விளைவிக்கும் பொருட்கள் சேர்க்கப்படுவதாக குற்றம்சாட்டி, தமிழ்நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், ஒரு முறை பயன்படுத்தி வீசப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுவை பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்திருந்தது.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தும், தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்யக் கோரியும் தமிழ்நாடு – புதுச்சேரி பேப்பர் கப் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கடந்த ஆண்டு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையின் போது, தமிழ்நாடு அரசின் பிளாஸ்டிக் தடை முடிவால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து பெறப்படும் நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் அங்கீகாரத்தை (EPR) பெற முடியாமல், உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், தமிழ்நாடு -புதுச்சேரி பேப்பர் கப் தயாரிப்பாளர்கள் சங்கம் வாதிட்டது.

மேலும், தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முழுத் தடை கடந்த 2020 ஆம் ஆண்டு விதிக்கப்பட்டது. ஆனாலும் அண்டை மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும், பிளாஸ்டிக் கொடிகள், உணவு wrapping ஷீட்டுகள், பேக்கிங் டப்பாக்கள், உள்ளிட்டவை மாநிலத்தில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதனால் பிளாஸ்டிக் தொழிலை நம்பி உள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறதே தவிர தமிழ்நாடு அரசின் நோக்கம் நிறைவேறவில்லை.

எனவே தமிழ்நாடு அரசின் பிளாஸ்டிக் தடை அரசாணையை ரத்து செய்ய வேண்டும் அல்லது, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் அங்கீகாரத்தைப் பெறும் வகையில், 2020 ஆம் ஆண்டு அரசாணையில் மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இதையும் படியுங்கள் : தங்கம் விலை கிடுகிடு உயர்வு – ஒரே நாளில் ரூ.600 அதிகரித்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

இந்நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரவீந்திர பட் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் என்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், பேப்பர் கப்-கள் மீதான தடை தொடர்பான உத்தரவை மத்திய அரசின் நடைமுறைகள் அடிப்படையில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.