மின்துறையை கடனில் மூழ்கிய துறையாக மாற்றியது அதிமுக அரசு தான் என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி தலையங்கத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
திமுக நாளேடான முரசொலி தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
அ.தி.மு.க.வின் பத்தாண்டு கால ஆட்சியில் அதளபாதாளத்தில் கவிழ்ந்து கிடந்தது மின் துறை ஆகும். மின் மிகை மாநிலம் என்று சொல்லிக் கொண்டு, அநியாய விலைக்கு மின்சாரத்தை விலை கொடுத்து வாங்கி மின் துறையை கடனில் மூழ்கிய துறையாக மாற்றிவிட்டது அ.தி.மு.க. அரசு. புதிய மின் திட்டங்களும் இல்லை.
2011 ஆம் ஆண்டு மின் உற்பத்தி பகிர்மானக் கழகத்துக்கு இருந்த கடன் என்பது ரூ.43,493 கோடி ஆகும். அ.தி.மு.க. ஆட்சியை விட்டு இறங்கும் போது ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து, 823 கோடியை கடனாக வைத்து விட்டு கம்பி நீட்டினார்கள். இதுதான் மிக முக்கிய காரணம் ஆகும்.
வட்டியே ரூ.16 ஆயிரம் கோடி கட்டும் நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டார்கள். அதிகரித்த மின்சாரக் கடன் சுமையே இதற்கு அடிப்படையான காரணம்.
கடந்த பத்து ஆண்டுகளில் மின்சார வாரியத்தின் வட்டிச் சுமை ரூ.4,588 கோடியில் இருந்து ரூ.16, 511 கோடியாக உயர்த்தியது தான் அ.தி.மு.க. ஆட்சியின் மகத்தான சாதனையாகும்.
இப்படி மூன்று முக்கியமான காரணங்களுக்கும் காரணமானவை பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் தான். இதனை மக்கள் உணர்ந்துவிடக் கூடாது என்பதற்காக திசை திருப்பவே போராட்டம் அறிவிக்கின்றன அந்தக் கட்சிகள்.
101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு மாதத்துக்கு ரூபாய் 27.50 மட்டுமே அதிகரிக்கிறது.
அனைத்து வீட்டு மின் நுகர்வோரும் 100 யூனிட் வரைக்கும் விலையில்லா மின்சாரத்தை பயன்படுத்தலாம். இதன் மூலமாக 1 கோடி மின் நுகர்வோர்கள் பயனடைகிறார்கள்.
ஏழை எளிய மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில்தான் மின் கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொடர் முயற்சிகளின் காரணமாக கடந்த நிதியாண்டில் ரூ.2,200 கோடி சேமிப்பு எட்டப்பட்டுள்ளது.
நுகர்வோர் தங்களது கோரிக்கைகளைச் சொல்வதற்கு 24 மணிநேரமும் செயல்படும் ‘மின்னகம் இயங்கி வருகிறது. 1 லடசம் இலவச விவசாய மின் இணைப்புகள் தரப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டு காலத்தில் மாநிலம் முழுவதும் 9.59 லட்சம் பணிகள் மின் துறையால் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள 42 சதவிகிதம் மின்நுகர்வோருக்கு மின் கட்டணத்தில் மாற்றமில்லை என்பதே உண்மை. குஜராத் மாநிலத்தில் 100 யூனிட்டுக்கு 515 ரூபாய் கட்டணம். தமிழ்நாட்டில் 100 யூனிட் வரை கட்டணம் இல்லை.
குஜராத்தில் 200 யூனிட்டுக்கு 1045 ரூபாய். தமிழ்நாட்டில் 225 ரூபாய் தான். குஜராத்தில் 300 யூனிட்டுக்கு 1595 ரூபாய். தமிழ்நாட்டில் 675 ரூபாய். குஜராத்தில் 400 யூனிட்டுக்கு 2190 ரூபாய். தமிழ்நாட்டில் 1125 ரூபாய். இதைவைத்துப் பார்த்தால் குஜராத் பா.ஜ.க. தான் போராட்டம் நடத்த வேண்டும்.
தமிழ்நாடு அளவுக்கு கட்டணத்தைக் குறையுங்கள் என்று குஜராத் பா.ஜ.க. தான் முழக்கம் எழுப்ப வேண்டும். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அங்கு போய் தான் முழக்கம் எழுப்ப வேண்டும் என்று முரசொலி தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்லது.








