வெளிநாட்டில் சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பியதற்கு காரணமாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், திமுக இளைஞரணி செயலரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என்று திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
திரைப்பட இயக்குநா் டி.ராஜேந்தா் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஒருமாத காலமாக அமெரிக்க நாட்டில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.
மருத்துவ சிகிச்சை முடிந்து இன்று அதிகாலை அமெரிக்காவிலிருந்து துபாய் வழியாக சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு டி.ராஜேந்தர் ரசிகர்கள் மற்றும் லட்சிய திமுக கட்சியைச் சார்ந்த தொண்டர்கள் திரளானோர் பூங்கொத்து கொடுத்தும் பொன்னாடை அளித்தும் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியவர் டி.ராஜேந்தர், மேல் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்குச் சென்று அங்கு மருத்துவ சிகிச்சை பெற்று தற்போது உடல் நலம் தேறி நலமுடன் வந்ததற்கு காரணம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் உதயநிதி ஸ்டாலின் அவர்களும்தான் என்று கூறிய அவர் வெளிநாடு சென்று சிகிச்சை பெற்றதற்கு உதவிய முதல்வருக்கும் அவரின் குடும்பத்தை சார்ந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
மேலும் நடிகர் சிம்புவின் திருமணம் எப்போது என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர் திருமணம் என்பது கடவுள் தீர்மானிப்பது என்றும் இருமனம் ஒன்று சேர்ந்தால் திருமணம் என்று கூறினார்.








