பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் அத்யாவசிய பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து மாநிலங்களவையிலிருந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
கடந்த 18ந்தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதிலிருந்து இரு அவைகளிலும், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு, மற்றும் அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வு பிரச்சனையை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. பாக்கெட்டுக்களில் அடைக்கப்பட்டு லேபிள் ஒட்டி விற்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருட்களுக்கு 5 சதவித ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது
இன்றும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இந்த விவகாரம் எதிரொலித்தது. பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் ஏகமாக உயர்ந்து, ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் குற்றம்சாட்டினர். அவையின் பிற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு, விலை உயர்வுக்கான காரணங்களையும், இதற்கு பரிகாரம் காணும் வழிவகைகளையும் ஆராய்ந்து அறிவதற்கான விவாதத்தினை நடத்த வேண்டும் என மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா அந்த அவையில் வலியுறுத்தினார்.
ஆனால் அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனைக் கண்டித்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்வதாக திருச்சி சிவா அறிவித்தார். திமுக எம்.பிக்கள் வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி,
தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி , இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்களும் மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்!







