இன்னுயிர் காப்போம் திட்டத்திற்கான உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்வு!

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் இலவச சிகிச்சைக்கான உச்சவரம்புத் தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.  தமிழக சட்டசபையில் 2024-2025 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். அவர் தனது…

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் இலவச சிகிச்சைக்கான உச்சவரம்புத் தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

தமிழக சட்டசபையில் 2024-2025 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.

அவர் தனது பட்ஜெட் உரையில்,  இன்னுயிர் காப்போம் திட்டம் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு வருமாறு: 

தமிழ்நாடு மருத்துவத் துறையின் தொடர் முயற்சிகளினால் 2030 ஆம் ஆண்டுக்குள் அடைய வேண்டிய கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் நலம் தொடர்பான நிலைத்த வளர்ச்சி இலக்குகளை நமது மாநிலம் ஏற்கெனவே எட்டியுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் தொற்றாநோய்களின் பரவல் அதிகரித்து வருவதை கருத்திற்கொண்டு தொற்றாநோய் உண்டாவதற்கு முக்கியக் காரணிகளாக விளங்கும் உயர் ரத்த அழுத்தம்,  சர்க்கரை நோய் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவது அவசியம்.

இந்த நோக்கத்தோடு மக்களைத் தேடி மருத்துவம் எனும் ஒரு மகத்தான திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் வீட்டிலிருந்தே பயன்பெறும் வகையில் சேவைகளை வழங்கும் திட்டத்திற்காக ரூ 243 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

மருத்துவக் காப்பீட்டை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அரசு மருத்துவமனைகளின் பங்களிப்பை 50 சதவீதத்திற்கும் மேலாக உயர்த்தி நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.  இந்த மருத்துவமனைகளில் கட்டமைப்பை மேலும் மேம்படுத்தி,  உயர் சேவைகளை வழங்குவதற்காக காப்பீட்டுத் தொகுப்பு நிதியிலிருந்து 200 கோடி ரூபாய் செலவிடப்படும்.

விலைமதிப்பற்ற மனித உயிர்களைக் காத்து 2 லட்சம் நபர்களுக்கு மேல் பயன்பெற்றுள்ள நாட்டிலேயே முன்னோடியான இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தை மேலும் மேம்படுத்திட இந்த அரசு முனைந்துள்ளது.  சிகிச்சை செலவுகளைக் கருத்தில் கொண்டு இந்த திட்டத்தின் கீழ் விபத்து நடந்த முதல் 48 மணி நேரத்தில் வழங்கப்படும் இலவச சிகிச்சைக்கான உச்சவரம்பு ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

மாநிலம் முழுவதிலும் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் நோய் கண்டறிதல் சேவைகளுக்கான கட்டமைப்பு வசதிகள் வரும் நிதியாண்டில் மேலும் மேம்படுத்தப்படும். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வட்டம், அரியலூர் மாவட்டம் – செந்துறை, காஞ்சிபுரம் மாவட்டம்- ஸ்ரீபெரும்புதூர்,  ராணிப்பேட்டை மாவட்டம்- அரக்கோணம் ஆகிய அரசு மருத்துவமனைகளிலும் தேனி,  சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 50 படுக்கைகள் கொண்ட 6 தீவிர சிகிச்சை பிரிவுகள் 142 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

அதே போல் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டப்படும். மேலும் 87 கோடி ரூபாயில் 25 வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகளுக்கு கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும். சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் 64 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.