வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு பரப்புவோரை இரும்புக் கரம் கொண்டு அடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.
கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டி பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி அங்கு அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலைக்கு அமைச்சர்கள் முத்துச்சாமி மற்றும் சாமிநாதன், நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. 60-க்கும் மேற்பட்ட குதிரை வண்டி உரிமையாளர்கள் கலந்துகொண்ட இப்போட்டியினை அமைச்சர்கள் முத்துச்சாமி, சாமிநாதன், நடிகர் சத்யராஜ் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துச்சாமி, மார்ச் மாதம் நடக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்தின் தேதியை முதலமைச்சர் அறிவிப்பார். மேற்கு மண்டலம் என்றாலே அது அதிமுக தான், திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்று கூறிவந்தனர். ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி, அதை மாற்றி அமைத்துள்ளது. அத்திகடவு அவிநாசி திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டுவந்ததால் தான் தாமதமாகிறது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் நிலம் கையகப்படுத்துவதில் முறையாக பணிகள் நடக்கவில்லை அதனால் குழாய் பதிப்பதில் சிக்கல்கள் இருந்தன. அதுமட்டுமல்லாமல் விவசாயிகளிடம் பேசி சுமூகமான முடிவுகளை எடுக்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் விவசாயி மற்றும் நில உரிமையாளர்களிடம் அமர்ந்து பேசி, உரிய கோரிக்கைகளை கேட்டறிந்து தற்போது பணிகள்
நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சாமிநாதன், வடமாநில தொழிலாளர்கள் தாக்குவதைப் போல பழைய வீடியோக்களை வெளியிட்ட நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தவறான வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா