சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் ரூ.95 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக 95 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகளை இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற செய்தி மக்கள் தொடர்பு துறை மானிய கோரிக்கையில் சுதந்திர போராட்ட வீரர்களை கௌரவிக்கும் விதமாக சென்னை காந்தி மண்டபத்தில் சிலைகள் நிறுவப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியாகி ஓராண்டு ஆன நிலையில் சிலைகளை நிறுவும் பணிகள் கடந்த சில மாதமாக நடைபெற்று வந்தன. அதன் பணிகள் நிறைவடைந்த நிலையில் இந்த நிலையில் தற்போது சிலைகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனையும் படியுங்கள்: வாஜ்பாயும், கருணாநிதியும் உயர்ந்த நண்பர்கள்- முரசொலி விளக்கம்
ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மருதுபாண்டியர்களின் திருவுருவச்சிலை, ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச்சிலையும் மற்றும் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் வ.உ.சிதம்பரனார் கோவை சிறையில் இழுத்த பொலிவூட்டப்பட்ட செக்கினையும், அன்னாரது மார்பளவுச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக நிறுவப்பட்டுள்ள இந்த மூன்று சிலைகளையும் கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதேபோல மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூரில் ரூ.1.47கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவு மண்டபத்தை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நீர்வளத்துறையின் பொள்ளாச்சி தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் வி.கே.பழனிசாமி கவுண்டர், சி. சுப்பிரமணியம், நா.மகாலிங்கம் ஆகியோருக்கு அமைக்கப்படவுள்ள சிலைகளுக்கான பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
மேலும் சுதந்திரப்போராட்ட வீரர் தளி பாளையக்காரர், மலையாண்டி வெங்கிடுபதி, எத்தலப்பர் நாயக்கர் நினைவாக உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் அமைக்கப்படவுள்ள உருவச்சிலைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
– யாழன்







