நாகர்கோவில் மாநகராட்சிக்கு கலைவாணர் கலையரங்கம் பெயர் வைக்காவிட்டால் தமிழ்நாடு முதல்வர் அதனை திறந்து வைக்க கூடாது என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததற்கு, பதிலளிக்கும் விதமாக மாநகராட்சியின் பெயர் வைக்கும் பிரச்னைகளில் நிர்வாகம் தலையிடாது என மேயர் மகேஷ் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் இன்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் விமானத்துறை போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் மற்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், நாகர்கோவில் மாநகராட்சியில் ஏற்கனவே கலைவாணர் கலையரங்கம் என்ற பெயர் இருந்தது. அது நீக்கப்பட்டு தற்போது புதிய கட்டிடம் கட்டும் பணி முடிந்து, அதனை தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை திட்டமிட்டு மாநகராட்சி மேயர் மகேஷ் அந்த பெயரை மாற்றி விட்டு, மறைந்த கருணாநிதியின் பெயரை வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். அவ்வாறு கலைவாணர் பெயர் வைக்காவிட்டால் தமிழக முதல்வர் அதனை திறந்து வைக்க கூடாது என்று அதிரடியாக பொன். ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார்.
பொன்.ராதாகிருஷ்ணனின் இந்த பேட்டிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கன்னியாகுமரி மாநகராட்சி மேயர் மகேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது ” அரசாங்க ஆணைப்படி மாநகராட்சி மற்றும் முக்கிய இடங்களில் பெயர் வைப்பது தொடர்பாக யாரும் எந்த முடிவும் எடுக்க முடியாது. அப்படி பேரை வைத்தால் அது அரசாணை மீறுவதாக ஆகிவிடும். எனவே நாகர்கோவில் மாநகராட்சி பெயர் விசயத்திலும், நிர்வாகம் அதே முறையை கடைப்பிடிக்கிறது. அதற்கான பெயர் வைப்பது அரசு தான் முடிவு செய்ய வேண்டும். எனவே இதில் எந்தவிதமான சம்பந்தமும் தங்களுக்கு கிடையாது, பாஜகவினர் அரசியல் செய்வதற்காக இது போன்ற செய்திகளை கூறுகிறார்கள் என்று தெரிவித்தார்.
- பி. ஜேம்ஸ் லிசா