சென்னையில் வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணியாவிட்டால் இன்று முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. இதையடுத்து, அனைவரும் முககவசம் அணிவது கட்டாயம் என்று சென்னை மாநகராட்சி சார்பில் சில தினங்களுக்கு முன் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தடுப்பூசி முகாம்களும் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த 2 வாரங்களாக சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது. எனவே, வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். மீறினால் ரூ.500 அபராதமாக விதிக்கப்படும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2,662 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,060 பேருக்கு தொற்று உருதியாகியுள்ளது. செங்கல்பட்டில் 373 பேரும், கோவையில் 137 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இதனிடையே, தென்காசி மாவட்டத்தில் பொது இடங்களுக்கு வருவோர் முககவசம் அணியாவிட்டால் ரூ 500 அபராதம் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா நோய் பெருந்தொற்று பாதிப்பு தற்போது கணிசமாக உயரத் தொடங்கியுள்ளதால் தடுப்பூசி செலுத்துவது, பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திக் கொள்வது, அடிக்கடி சோப் பயன்படுத்தி கை கழுவுதல், பொது இடங்களில் எச்சில் துப்பாமல் இருப்பது ஆகியவற்றை பொதுமக்கள் கடைபிடிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு முககவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு அரசு விதிகளின்படி ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.








