அதிமுக பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 23ம் தேதி நடைபெற்றது. உட்கட்சியில் ஒற்றை தலைமை விவகாரம் தலைத்தூக்கிய போது இந்த பொதுக்குழு நடத்த இடைக்காலத் தடை கேட்டு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது.
தொடர்ந்து இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அதிமுகவில் புதிய தீர்மானங்கள் எதுவும் இயற்றக்கூடாது என தடை விதித்து உத்தரவிட்டது. எனவே 23ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் நிறைவேற்ற முடியாமல் போனது. ஆனால் கடந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து அடுத்த பொதுக்குழு வரும் 11ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.








