டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட்: நெல்லை அணி 4 ஆவது வெற்றி

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 10ஆவது ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நெல்லை ராயல் கிங்ஸ் வெற்றி பெற்றது. இந்த போட்டித் தொடரில் நெல்லை அணி…

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 10ஆவது ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நெல்லை ராயல் கிங்ஸ் வெற்றி பெற்றது.

இந்த போட்டித் தொடரில் நெல்லை அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி ஒரு தோல்வி கூட இல்லாமல் நான்கிலும் வெற்றி பெற்றுள்ளது. புள்ளிப் பட்டியலிலும் 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

மதுரை அணி 3 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் மதுரை அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களம் இறங்கிய நெல்லை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 209 ரன்களை குவித்தது. ஸ்ரீ நிரஞ்சன் 47 ரன்களும், அபராஜித் 34 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, சஞ்சய் யாதவும், கேப்டன் இந்திரஜித்தும் நிலைத்து நின்று விளையாடினர்.

சஞ்சய் யாதவ் 42 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த காரணமாகத் திகழ்ந்தார். இந்திரஜித் 34 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மதுரை அணி தரப்பில் கிரண் ஆகாஷ் 2 விக்கெட்டுகளையும், ஆர்.மிதுன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து, 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் கண்ட மதுரை அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.

அந்த அணியின் விக்கெட் கீப்பர் அருண் கார்த்திக் 57 பந்துகளில் சதம் பதிவு செய்தும் அது வீணானது. கேப்டன் சதுர்வேத் 27 ரன்களிலும், ஜெகதீஷன் கெளசிக் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். எஞ்சி வீரர்களும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால், அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

நெல்லை அணி பந்துவீச்சாளர் ஹரீஷ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும் ஈஸ்வரன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக சஞ்சய் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறவுள்ளது. முதலாவது ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணியும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியும் மோதுகிறது. இந்த ஆட்டம் திண்டுக்கல் நகரில் பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்குகிறது. இதே மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் விளையாடுகின்றன.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.