பேருந்துகளில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதைத்தொடர்ந்து, சென்னை மாநகராட்சிப் பேருந்துகளில் பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிப்போர் முகக்கவசம் அணிந்திருப்பதை நடத்துநர்கள் உறுதி செய்ய வேண்டும். பேருந்துகளில் நடத்துநர், ஓட்டுநர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். போக்குவரத்துப் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். பொதுஇடங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா







