தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாகவும், இபிஎஸ் தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கட்சியை பலப்படுத்துதல், கூட்டணிகளுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே அறிஞர் அண்ணா குறித்து மாநில பாஜக தலைவர் அண்ணமாலை சில கருத்துக்களை கூறியிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்டோர் அண்ணாமலை கருத்துக்கு தக்க பதிலடி கொடுத்தனர். பாஜகவுடன் கூட்டணி கிடையாது என ஜெயக்குமார் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து அதிமுக மூத்த தலைவர்கள் எஸ்.பி.வேலுமணி, சிவி. சண்முகம் உள்ளிட்டோர் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்தனர்.
இந்நிலையில் அதிமுக தலைமைக் கழக செயலர்கள், மாவட்டச் செயலர்கள், கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் 5.30 மணியளவில் நிறைவு பெற்றது.இந்தக் கூட்டத்தில், பாஜகவுடனான கூட்டணி நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாஜக – அதிமுக கூட்டணி முறிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசுகையில், கடந்த ஓராண்டாகவே, திட்டமிட்டு, உள்நோக்கத்தோடு அண்ணா, ஜெயலலிதா உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் தொடர்பாக பாஜக விமரிசித்து வருகிறது. அதிமுக பொன் விழா மாநாட்டையும் பாஜக தலைமை விமர்சித்திருந்தது. எனவே, 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்துக்கும் விருப்பத்துக்கும் மதிப்பளித்து, கூட்டணியிலிருந்து விலகுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
பாஜக கூட்டணி முறிவை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். ராயப்பேட்டை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் இதனை கொண்டாடி வருகின்றனர்.