“பூரண மதுவிலக்கு அமல்படுத்தினால் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடக்கும்” – கார்த்திக் சிதம்பரம் எம்.பி.!

பூரண மதுவிலக்கு அமல்படுத்தினால் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடக்கும் என்று கார்த்திக் சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார்.

மதுரையில் கார்த்திக் சிதம்பரம் எம்.பி. செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் வழங்கப்படும். குடும்பங்களுக்கு 2,000 ரூபாய் கொடுப்பதால் பொருளாதாரம் வளரும். கிராமப்புறங்களில் சமமான வளர்ச்சி கிடைக்க 2,000 ரூபாய் உதவியாக இருக்கும். வருமான வரியை கணக்கிடமால் அனைவருக்கும் மாதந்தோறும் 2,000 ரூபாய் வழங்கப்படும்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை எங்களுக்கு ஒரு ப்ளூ பிரிண்ட், இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் எடுப்போம். காங்கிரஸ் – திமுக கூட்டணி நல்ல முறையில் உள்ளது. கலைஞர் – சோனியா உருவாக்கிய கூட்டணி. ராகுல்காந்தி தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்வது அவரின் விருப்பம். நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடப்பதால் ராகுல்காந்திக்கு பணி இருக்கும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமற்றது. உலக அளவில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தவில்லை.

பூரண மதுவிலக்கு அமல் படுத்தினால் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடக்கும். நாம் தமிழர் சீமானுக்கு மட்டுமே தனித்துவமான வாக்குகள் உள்ளன. மற்ற கட்சிகள் கூட்டணியில் தேர்தலை சந்திப்பதால் ஒரு கட்சியின் தனித்துவமான வாக்காக எடுத்துக் கொள்ள முடியாது. விஜய் இந்த முறை தனியாக தேர்தலை சந்திக்கிறார். தேர்தலுக்கு பின்னர் தான் அவருடைய வாக்கு சதவீதம் தெரியவரும்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.