ஜெயம் ரவி நடிக்கும் ’இறைவன்’ படத்தில் இருந்து முன்னோட்டக் காட்சிகள்(ஸ்னீக் பீக்) வெளியாகியுள்ளது.
‘தனி ஒருவன்’ படத்திற்கு பின்னர் ஜெயம் ரவியும் நயன்தாராவும் சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் ’இறைவன்’. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் படங்களை இயக்கிய ஐ.அஹமது இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நரேன், விஜயலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் இறைவன் திரைப்படம் வெளியாகிறது. அண்மையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல், படத்தில் இருந்து சில பாடல்களும் வெளியாகி இருந்தன.
இன்னும் 2 தினங்களில் திரைக்கு வர உள்ள ‘இறைவன்’ திரைப்படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு. சைக்கோ த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில், அதிகமான ரத்தம் தெறிக்கும், ஆக்ரோஷமான காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இறைவன் படத்தில் இருந்து முன்னோட்டக் காட்சிகள்(ஸ்னீக் பீக்) வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.







