காஸாவில் உடனடியாக மனிதாபிமான போர் நிறுத்தம் அமல்படுத்த வேண்டும் என்று ஐநா சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா, பிரிட்டன் உட்பட 45 நாடுகள் வாக்களிக்கவில்லை.
ஆக்கிரமிப்பு காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் கடந்த 2005-ம் ஆண்டு வெளியேறியது. அதன் பிறகு அந்தப் பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றிய ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்தப் பதற்றம் பல முறை பெரிய அளவிலான போராக உருவெடுத்துள்ளது. இந்தச் சூழலில், காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் கடந்த 7-ம் தேதி சுமார் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினர்.
அத்துடன், இஸ்ரேலுக்குள் நிலம், கடல், வான் வழியாக ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினர், அங்கிருந்த 1,400-க்கும் மேற்பட்ட பொதுமக்களையும், ராணுவத்தினரையும் படுகொலை செய்தனர். இது தவிர இஸ்ரேல் ராணுவத்தினர், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் படையினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.
இதுவரை இல்லாத அளவுக்கு தங்கள் நாட்டுக்குள் ஹமாஸ் நடத்திய இந்த கொடூரத் தாக்குதலுக்கு பதிலடியாக அந்தப் பகுதியை முற்றுகையிட்ட இஸ்ரேல் ராணுவம், கடந்த 20 நாள்களாக காஸா முழுவதும் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், காஸாவுக்குள் தரைவழியாக நுழைந்து ஹமாஸ் அமைப்பினரை வேட்டையாடவும் இஸ்ரேல் ராணுவம் ஆயத்த நிலையில் உள்ளது. இதற்காக ஏராளமான பீரங்கிகள், கவச வாகனங்களுடன் இஸ்ரேல் வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலுக்கு முன்னேற்படாக எல்லைக்குள் ஊடுருவி பீரங்கிகள் உதவியுடன் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தின. எல்லையில் அமைந்துள்ள ஹமாஸ் நிலைகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. இதனைதொடர்ந்து 2வது நாளாக காஸாவுக்குள் தரைவழியாக நுழைந்து இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதன் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இஸ்ரேல் – ஹமாஸ் விவகாரத்தில் இரண்டு வாரங்களாக தீர்மானங்கள் ஏதும் கொண்டுவர முடியாத நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ஐநா பொதுச்சபையில் அவசர கூட்டம் நடைபெற்றது.
ஐக்கிய அரசு கூட்டமைப்பு சார்பில் கொண்டு வந்த இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. தீர்மானத்துக்கு ஆதரவாக 120 நாடுகளும், எதிராக 14 நாடுகளும் வாக்களித்த நிலையில், 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. தீர்மானத்தின் மீது 113 நாடுகள் பேச இருந்த நிலையில், அவசரம் கருதி பாதியிலேயே வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, பின்லாந்து, ஜெர்மனி, கிரீஸ், ஈராக், இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, போலந்து, தென் கொரியா, சுவீடன், துனிசியா, உக்ரைன் மற்றும் பிரிட்டன் உட்பட 45 நாடுகள் வாக்களிக்கவில்லை.
இந்த தீர்மானத்தில், சர்வதேச மனித உரிமை சட்டங்களை மதித்து, பொதுமக்களையும், பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் பாதுகாக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களை காஸாவிற்குள் அனுமதிக்க வேண்டும். பாலஸ்தீன குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஹமாஸ் மற்றும் பணயக்கைதிகள் ஆகிய இரண்டு முக்கியமான வார்த்தைகள் தீர்மானத்தில் இடம்பெறவில்லை என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட் வாக்கெடுப்புக்கு முன் எதிர்த்தார். ”முதலாவது அக்டோபர் 7-ம் தேதி பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் ஹமாஸ் என்று பெயரிட இந்தத் தீர்மானம் தவறியிருப்பது தவறானது. மேலும் இந்தத் தீர்மானம் அப்பாவி மக்களைப் பற்றி குறிப்பிடவில்லை. ஹமாஸின் மிருகத்தனத்தை மூடிமறைக்கிறார்கள்.” என அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த தீர்மானத்தில் இஸ்ரேலை “ஆக்கிரமிப்பு சக்தி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாலஸ்தீனிய குடிமக்கள், ஐ.நா ஊழியர்கள் மற்றும் தன்னார்வ பணியாளர்கள் வாடி காசாவின் வடக்கே உள்ள காசா பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளையும் காலி செய்து தெற்கே இடம்பெயர வேண்டும் என்ற இஸ்ரேலின் உத்தரவை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.









