இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் சிக்கியிருந்த மேகாலயா மாநிலத்தை சேர்ந்த 27 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மேகாலயா முதலமைச்சர் கான்ராட் கே. சங்மா தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது நேற்று காலை ராக்கெட்டுகளை வீசியும், எல்லை தாண்டியும் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், 100-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனா். 2,500 ராக்கெட் குண்டுகள் மட்டுமே ஹமாஸ் வீசியதாகவும், பயங்கரவாதிகள் ஊடுருவிய 22 இடங்களில் சண்டை தொடா்வதாகவும் இஸ்ரேல் தெரிவித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இஸ்ரேல், போர்ப் பிரகடனம் அறிவித்து நடத்திய பதிலடி தாக்குதலில் காஸா பகுதியில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1,600-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்ததாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காஸா எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சண்டை 2ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது. இதனிடையே காஸாவில் வசித்து வரும் மக்கள் உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் காஸாவுக்கு வழங்கப்படும் குடிநீர், எரிபொருள், உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை நிறுத்தப்போவதாகவும் கூறியுள்ளார்.
இருத்தரப்பினர் இடையே நடைபெற்று வரும் இந்த சண்டையில் இதுவரை இஸ்ரேல் தரப்பில் 300 பேரும், பாலஸ்தீனத்தில் 200க்கும் மேற்பட்டோரும் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹமாஸ் தாக்குதலில் எல்லைப் படை அதிகாரிகள் உட்பட 30 காவல் அதிகாரிகள் பலியாகியுள்ளதாக இஸ்ரேல் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இதனிடையே தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும். தேவைப்பட்டால் பாதுகாப்பு மையங்களுக்குச் செல்ல வேண்டும் என்று அந்நாடுகளில் இருக்கும் இந்தியர்களுக்கு இந்தியா அறிவுருத்தியது. இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் போர் நிலையில் சிக்கியிருந்த மேகாலயா மாநிலத்தை சேர்ந்த 27 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மேகாலயா முதலமைச்சர் கான்ராட் கே. சங்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) சமூக வலைத்தளத்தில், “சமீபத்திய தகவல்களின்படி, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகத்தின் முயற்சியால், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் மோதல் பகுதியில் சிக்கித் தவித்த மேகாலயாவைச் சேர்ந்த 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட 27 பேரும் பாதுகாப்பாக எகிப்து எல்லையை கடந்துள்ளனர்.” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.







