ஆதித்யா L1 விண்கலம் ஆரோக்கியமாகவும், சூரியனின் L1 புள்ளியை நோக்கி பயணிப்பதாகவும் இஸ்ரோ தனது X தளத்தில் பதிவிட்டு உள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, சமீபத்தில், சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிக்கரமான சந்திரனில் தரையிறங்கியது. இதையடுத்து, இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா திட்டத்தில் இறங்கியுள்ள நிலையில், இந்த திட்டத்தின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 கடந்த செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. பூமியில் இருந்து 125 நாட்கள் பயணம் செய்து விண்கலம் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ சென்றடையும். அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் விண்கலம் ஈடுபடும்.
அதற்கு முன்னதாக ஆதித்யா எல்-1 விண்கலம் 16 நாட்கள் பூமியைச் சுற்றி வரும் போது 5 முறை சுற்றுப்பாதையின் அளவு உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் பூமியின் சுற்றுப்பாதையை உயர்த்துவதற்கான முதல் கட்டப்பணி கடந்த 3-ந்தேதி நடந்தது. தொடர்ந்து அடுத்து 2-ம் கட்டமாக கடந்த 4-ந்தேதி அதிகாலை 3 மணி அளவில் மீண்டும் சுற்றுப்பாதை உயர்த்தும் பணி நடந்தது. தொடர்ந்து 3-வது கட்டமாக சுற்றுவட்டப்பாதை உயர்த்தும் பணி கடந்த 10-ம் தேதியும், 4- வது முறையாக சுற்றுவட்ட பாதை உயர்த்தும் பணி 15-ந்தேதியும் வெற்றிகரமாக நடந்தது.
ஆதித்யா எல்.1 விண்கலம் அறிவியல் தரவுகளை சேகரிக்க தொடங்கியது என இஸ்ரோ அண்மையில் தெரிவித்தது. ஸ்டெப்ஸ் கருவியின் சென்சார்கள் பூமியிலிருந்து 50,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அதி வெப்ப ஆற்றலை அளவிடத் தொடங்கியது எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரோ இன்று (அக்.8) தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில், ஆதித்யா விண்கலம் தொடர்பான விபரங்களை பதிவிட்டுள்ளது.
அதில், “ஆதித்யா எல் 1 விண்கலத்தை ஹாலோ சுற்றுப்பாதையை நோக்கிச் செலுத்துவதற்கான பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு உள்ளன. ஹாலோ பாதைக்கு விண்கலத்தை மாற்றம் செய்வதற்கான பணிகள் கடந்த அக்டோபர் 6இல் சுமார் 16 விநாடிகள் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டன. செப்டம்பர் 19 அன்று டிரான்ஸ்-லெக்ரேஞ்சியன் புள்ளி (TL1) டிராக் செய்யப்பட்ட நிலையில் பாதை மாற்றம் செய்வதற்கு தேவை ஏற்பட்டது
https://twitter.com/isro/status/1710887748511375711
ஆதித்யா L1 விண்கலத்தின் செயல்பாடுகள் நன்றாக இருக்கிறது மற்றும் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சூரியனின் L1 புள்ளியை நோக்கி ஆதித்யா L1 விண்கலம் பயணிக்கிறது. ஆதித்யா L1 தொடர்ந்து முன்னோக்கி நகர்வதால், காந்த புலமையை அளவிடும் கருவி சில நாட்களுக்குள் இயக்கப்படும்” என இஸ்ரோ தனது X பதிவில் தெரிவித்து உள்ளது.







