ரவுடி கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பு நேற்று பிற்பகல் பெட்ரோல் குண்டு வீச முற்பட்டவரை பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் பிரபல ரவுடி கருக்கா வினோத் என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து மேலும் 2 பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் தீர்மானத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால், ஆளுநர் மாளிகை மீது குண்டு வீசியதாக கருக்கா வினோத் தெரிவித்ததாக தகவல் வெளியானது. பின்னர் கருக்கா வினோத் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை நேற்று காவல்துறை வெளியிட்டது.
கருக்கா வினோத்தின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாகவும், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124ல் சேர்ப்பது குறித்து விசாரணைக்கு பிறகே முடிவு செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். வரும் அக்.30 ஆம் தேதி கருக்கா வினோத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இந்நிலையில் கருக்கா வினோத்தை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி காவல் துறை தரப்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கிண்டி காவல்துறை சார்பில் 3 நாள்கள் காவல் வழங்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.







