”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பசு சாணத்தை கிலோ 2 ரூபாய்க்கு அரசே வாங்கிக் கொள்ளும்” – அசோக் கெலாட் அறிவிப்பு

”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பசு சாணத்தை கிலோ 2 ரூபாய்க்கு அரசே வாங்கிக் கொள்ளும்”  என ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். அக்டோபர் 9-ம் தேதி 5 மாநில தேர்தல் தேதிகளையும்…

”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பசு சாணத்தை கிலோ 2 ரூபாய்க்கு அரசே வாங்கிக் கொள்ளும்”  என ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 9-ம் தேதி 5 மாநில தேர்தல் தேதிகளையும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் அறிவித்தார்.

  • சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
  • மிசோரத்தில் நவம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
  • மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
  • தெலங்கானாவில் நவம்பர் 30-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்தார்.

மேலும்  ராஜஸ்தானில் நவம்பர் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்  என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், அங்கு தேர்தல் தேதி நவம்பர் 25-க்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், மிசோரம், தெலங்கானாவைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தௌசா மாவட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தேர்தல் பேரணியில் ஈடுபட்டார். தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள்  தேர்தல் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் அளித்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது முதலமைச்சர் அசோக் கெலாட் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

  • ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 வழங்கப்படும், இது இரண்டு அல்லது மூன்று தவணைகளாக பெண்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என முக்கியமான தேர்தல் வாக்குறுதியை  அறிவித்துள்ளார்.
  • அதேபோல 1.05 கோடி குடும்பங்களுக்கு ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

மேலும் முதலமைச்சர் அசோக் கெலாட் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் சில முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். அதன்படி

  • அரசு கல்லூரி  மாணவர்களுக்கு மடிக்கணினி மற்றும் டேப்லட் வழங்குவது,
  • 1 கோடி  பெண்களுக்கு மூன்று வருடத்திற்கு இன்டெர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட்போன்கள்,
  • பழைய ஓய்வூதியத்தை கொண்டு  வருவதற்கான சட்டம்,
  • பேரிடரில் பாதிக்கப்படும் மக்களுக்கு ரூ.15லட்சம் காப்பீடு
  • பசு சாணத்தை கிலோ 2 ரூபாய்க்கு அரசே வாங்கி கொள்ளும் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.