ஊழல், சாதி, டாஸ்மாக்கை ஒழிக்க திமுகவுடன் கைகோர்க்க தயார்.. அண்ணாமலை பேட்டி..

ஊழல், சாதி, டாஸ்மாக் உள்ளிட்டவற்றை ஒழிக்க திமுகவுடன் கைகோர்க்க தயார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மக்கள் என் மண் பயணம் மேற்கொண்டு வருகிறார்.…

ஊழல், சாதி, டாஸ்மாக் உள்ளிட்டவற்றை ஒழிக்க திமுகவுடன் கைகோர்க்க தயார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மக்கள் என் மண் பயணம் மேற்கொண்டு வருகிறார். இரண்டாம் கட்ட யாத்திரை நடைபயணத்தில் மூன்றாம் நாளான நேற்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடை பயணத்தை தொடங்கினார். மடவார் வளாகம் பகுதியில் தொடங்கிய நடைபயணம் தெற்கு ரத வீதி ,தேரடி வீதி, பேருந்து நிலையம் பகுதி வழியாக ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் நிறைவடைந்தது.

நடை பயணத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் வரவேற்பை ஏற்ற அண்ணாமலை தேரடி பகுதியில் கண்களை கட்டி கொண்டு உரி அடித்தும்,சிறைச்சாலை பகுதி அருகே அமைக்கப்பட்டு இருந்த மேடையில் நெசவாளர்கள் பயன்படுத்தக்கூடிய ராட்டை சுற்றி மகிழ்ந்தார். பின்னர் கூட்டத்தில் பேசியஅண்ணாமலை கூறியதாவது:

“இந்தியா ஒன்பது ஆண்டுகளில் மாறி உள்ளது. நாடு மிகப் பெரிய வளர்ச்சி நாடாக மாறி
உள்ளது. திமுக ஆட்சியில் மது விற்பனை, அரிவாள் கலாச்சாரம், கனிமவள கொள்ளை அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதலமைச்சர் குடும்பத்திற்காக மட்டுமே ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. முதலும் முடிவும் இல்லாதது சனாதன தர்மம்.

வாழ்வில் அனைத்து விஷயங்களுடனும் ஒன்றியுள்ளது சனாதன தர்மம். திமுகவினருக்கு கோயில் உண்டியல் மீது மட்டும் கண் உள்ளது. உதயநிதி ஸ்டாலின் ஒரு குழப்பவாதி. அவர் என்ன பேசவென்று தெரியாமல் உள்ளார். மதுபான கடையை ஒழிப்போம், வறுமையை ஒழிப்போம் என்றால் நாங்களும் திமுகவோடு கை கோர்க தயார். ஆனால் சனாதனக் கொள்கை ஒழிக்கநினைத்தால் சேரமாட்டோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.