ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று (நவம்.16) வெளியிட்டார்.
200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நவம்பர் 25-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸும், ஆட்சியைப் பிடிக்க பாஜகவும் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன. இந்நிலையில் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ராஜஸ்தான் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
- அந்தத் தேர்தல் அறிக்கையில், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியை அதிகரித்து ஆண்டுக்கு ரூ.12,000 வழங்குதல்,
- பொருளாதார அடிப்படையில் நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிப்புத்தகம், பை உள்ளிட்டவை வாங்குவதற்காக ஆண்டுக்கு ரூ.1,200 வழங்கப்படும்.
- ரூ.40,000 கோடியில் மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சி.பி.ஜோஷி, அர்ஜூன் ராம் மேக்வால், வசுந்தரா ராஜே சிந்தியா, கஜேந்திரசிங் ஷெகாவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.







