ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்காத நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டனர்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழர்களின் பாரம்பரிய உடை, தலைப்பாகை அணிந்த படி பங்கேற்ற ஆளுநர் ரவி, தனது மனைவி லக்ஷ்மியுடன் பொங்கல் வைத்து மகிழ்ந்தார்.
தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை ஆளுநர் ரவி கண்டு ரசித்தார். எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒ பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியாக ஆளுநருக்கு மரியாதை செலுத்தி பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆற்றிய உரை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஆளுநரின் பொங்கல் விழாவை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் புறக்கணித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கு அனுப்பிய பொங்கல் விழா அழைப்பிதழில், தமிழ்நாடு அரசின் இலச்சினை இடம்பெறாமல், மத்திய அரசின் சிங்க இலச்சினை மட்டுமே இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.







